கடை கோடி மக்களையும் இந்த திட்டம் சென்றடைய வேண்டும்.. மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 12:25 PM IST
Highlights

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடக பிரிவுகளுக்கு அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த தகவல்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு ஊடக பிரிவுகளுக்கு அமைச்சர் எல்.முருகன் அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக நேற்று சென்னை வந்தார். அவரை, விமான நிலையத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் வெங்கடேஸ்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, செய்தி ஒலிபரப்பு அமைச்சக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில்மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில்;- கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஊடக அதிகாரிகள், சமூக ஊடகங்களில் அதிநவீன தொழில்நுட்பமான வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றைப் பயன்படுத்தி மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 5 கிலோ இலவச அரிசி / கோதுமை திட்டத்தின் பயன்கள் குறித்த செய்தியினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறினார்.  

நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் அகில இந்திய வானொலி மற்றும் பொதிகை செய்தி தொலைக்காட்சியும் தங்களது செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒலி, ஒளிபரப்பு செய்திட வேண்டும் எனவும் கூறினார். விவசாயிகள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கும் முறையினால் பயனடைந்தோர்களின் அனுபவங்கள் குறித்த தகவல்களையும், மத்திய அரசின் மின்னணு ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டுமென கூறினார்.

இதேபோல், தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புத்தக வெளியீட்டு பிரிவு தமிழகத்தின் வரலாறு, பாராம்பரியம், மொழியின் தொன்மை குறித்த புத்தகங்கள் அதிக அளவில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார். 

click me!