MGR Birth Anniversary : ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்… பிரதமர் மோடி புகழாரம் !!

By Raghupati RFirst Published Jan 17, 2022, 9:43 AM IST
Highlights

‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்’ என்று எம்.ஜி.ஆரை புகழ்ந்து இருக்கிறார் பிரதமர் மோடி. 

தமிழக மக்களால், மக்கள் திலகம் என்றும், புரட்சித்தலைவர் என்றும் அன்புடன் அழைக்கப்படும் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் இலங்கையில் கண்டி அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி பிறந்தார். தனது சிறுவயது முதற்கொண்டு நாடகத்தில் நடிக்கத் தொடங்கி, பின்னர் இத்துறையில் நல்ல அனுபவம் பெற்றுத் திரைத்துறைக்குச் சென்றார்.  1936-ம் ஆண்டு சதிலீலாவதி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்தாலும், 1950-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய 'மருதநாட்டு இளவரசி' மற்றும் 'மந்திரிகுமாரி' திரைப்படங்களின் வாயிலாகத் திரையுலகில் தனக்கென்று ஒரு தனியிடம் பெற்றதோடு, தொடர்ந்து 30 ஆண்டுகள் தமிழ்த் திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.

அவர் நடித்த பல படங்களுக்குத் தேசிய விருதுகளும், தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா விருதும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டது. அண்ணாவால் ‘இதயக்கனி‘ என்றும், தலைவர் கருணாநிதியால் வழங்கப்பட்ட ‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டமே பின்னாளில் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது. அன்னாரின் அளப்பரிய மக்கள் சேவையினைப் பாராட்டி, அவரின் மறைவுக்குப் பின் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா‘ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் காந்தியவாதியாகத் திகழ்ந்தாலும், பெரியார், அண்ணா ஆகியோரின் திராவிடச் சிந்தனையாலும், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு, 1953-ம் ஆண்டு தன்னைத் திராவிட இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். தான் நடித்த திரைப்படங்களிலும் திராவிடக் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். 1962-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சிறுசேமிப்புத்திட்டத் துணைத்தலைவராக, 1967-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக, 1969-ல் தி.மு.க.வின் பொருளாளராக, தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பராகத் தனது அரசியல் வாழ்வினைத் தொடங்கியவர், எம்.ஜி.ஆர்.

பின்னாளில் அ.தி.மு.க. என்கிற தனி இயக்கம் கண்டு, 1972-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்-அமைச்சர் ஆகப் பொறுப்பேற்றார். 1977 முதல் 1987-ம் ஆண்டுவரை தொடர்ந்து 10 ஆண்டுகள் 3 முறை தமிழகத்தின் முதல்-அமைச்சராகப் பதவி வகித்தார்.

முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் ஏழை, எளியோர் நலம் பெறுகின்ற வகையில், நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இன்றளவும் ஐக்கிய நாடுகள் சபையால் போற்றப்பட்ட சத்துணவுத்திட்டம், தமிழ் மீது கொண்டிருந்த மாறாதப் பற்றின் காரணமாக அவர் நடத்திய 5-ம் உலகத்தமிழ் மாநாடு, 1981-ம் ஆண்டு தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கம், பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசச் சீருடை, காலணி மற்றும் பற்பொடி வழங்கும் திட்டங்கள், முதியோருக்கு இலவச வேட்டி - சேலை வழங்கிடும் திட்டம், சுயநிதிக் கல்லூரிகளுக்கு அனுமதி ஆகிய குறிப்பிடத்தக்கவை.

பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.

— Narendra Modi (@narendramodi)

இந்நிலையில் எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.  அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும்  அனைவராலும் போற்றப்படுகிறது! ‘  என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!