எல்லையில் ஒரு அங்குல இடத்தைக்கூட இந்தியா விட்டு கொடுக்கவில்லை .. ராணுவத்தின் தீரத்தை புகழ்ந்த ராஜ்நாத் சிங்.

By Ezhilarasan BabuFirst Published Feb 11, 2021, 1:15 PM IST
Highlights

ஏற்கனவே இருந்த இடங்களுக்கே படைகளை இருநாடுகளும் திரும்பப்பெறும், தற்போது முதற்கட்டமாக பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதியில்  இருந்து படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. 

கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா ஒரு அங்குல நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்கவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  அதேபோல், இந்திய-சீனா  ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையின் விளைவாக கிழக்கு லடாக் பகுதியில் இருந்து சீனா தன் படைகளை பின்வாங்க ஒப்புக்கொண்டுள்ளது, அதை ஏற்று இந்தியாவும் படைகளை திரும்பப் பெறும் என அவர் கூறியுள்ளார்.

இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அதில் இறந்ததாக தகவல்கள் வெளியாகின, ஆனால் சீனா அதை உறுதி செய்யவில்லை. இச்சம்பவத்தை அடுத்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தன. இதனால் இரு நாட்டுக்கும் இடையே  எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. இதற்கிடையில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதை அடுத்து பதற்றம் குறையத் தொடங்கியது. இதுவரை ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. 

அதன் விளைவாக கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக  எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை பின் வாங்க சீனா முன்வந்துள்ளது. அதை ஏற்று இந்தியாவும் படைகளை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சீன பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், எழுத்துப்பூர்வ வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு லடாக் பகுதியில் தற்போதைய நிலவரம் குறித்து அவர் இன்று மாநிலங்களவையில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி செய்தது, ஆனால் அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததுடன்  சீன ராணுவத்தை தீரத்துடன் எதிர்கொண்டனர். 

சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை, படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவிற்கு இந்தியா தைரியமாக பதிலடி கொடுத்தது, லடாக் எல்லையில் ஒரு அங்குல இடத்தைக் கூட யாருக்கும்  ராணுவம் விட்டுக் கொடுக்காது. எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது, இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் நடந்த தொடர் பேச்சுவார்த்தையின் விளைவாக பதற்றத்தை தணிக்க இருநாட்டு படைகளையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நோக்கம். அதேநேரத்தில் எந்த சவால்களையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது என அவர் கூறினார். 

அதேபோல், ஏற்கனவே இருந்த இடங்களுக்கே படைகளை இருநாடுகளும் திரும்பப்பெறும், தற்போது முதற்கட்டமாக பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கு பகுதியில்  இருந்து படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. அப்பகுதியில் இருந்து முழுவதுமாக படைகள் வெளியேறிய 48 மணி நேரத்திற்குள், மூத்த தளபதிகள் மட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்படவேண்டும், மீதம் உள்ள பிரச்சினைகளையும் தீர்க்க தொடர் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர் கூறினார். இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் இந்தியா 3 நிபந்தனைகளை சீனாவுக்கு முன்வைத்துள்ளது, அதாவது, எல்லை  கட்டுப்பாட்டு கோடு இருநாடுகளாலும் மதிக்கப்பட வேண்டும். இருதரப்பினரும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்ற முயற்சிக்கக்கூடாது, அனைத்து ஒப்பந்தங்களையும் இருதரப்பினரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

click me!