தெரிந்தே திமுகவுடன் மோதிய சுயேட்சைகள்.. தூக்கியடிக்கப்பட்ட மனுக்கள்.. கனிமொழி, ராஜேஷ்குமார் எம்.பி ஆவது உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Sep 23, 2021, 12:15 PM IST
Highlights

இந்நிலையில் அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் சுயேச்சை வேட்பாளர்களாக தாக்கல் செய்த பத்மராஜன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி பதவிகளுக்கான வேட்பு மனு பரிசீலனையில் இன்று சுயேட்சை வேட்பாளர்களின்  மனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திமுக வேட்பாளர் டாக்டர் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி  தேர்வாவது உறுதியாகியுள்ளது. அதிமுகவில் மக்களவை உறுப்பினர்களாக இருந்த அக்காட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் தங்களது எம்பி பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். எனவே அவர்களின் இடங்கள் காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பாளராக டாக்டர் கனிமொழி சோமு மற்றும் கே.ஆர்.என் ராஜேஷ் குமார்  ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் கடந்த 21 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வைத்தியலிங்கம் இடத்திற்கு திமுக சார்பில் கே.ஆர் .என் ராஜேஷ்குமாரும், அதேபோல சுயேட்சை வேட்பாளர் அக்னி ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதேபோல கே.பி முனுசாமியின் இடத்திற்கு திமுக சார்பில் டாக்டர் கனிமொழி சோமுவும், சுயேச்சை வேட்பாளர்களாக அக்கினி ஸ்ரீ ராமச்சந்திரன், பத்மராஜன், புஷ்பராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் அந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் சுயேச்சை வேட்பாளர்களாக தாக்கல் செய்த பத்மராஜன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், புஷ்பராஜ் ஆகியோரது மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. அதேபோல் திமுக சார்பில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த டாக்டர் கனிமொழி சோமீன் மற்றும் கே ஆர் என் ராஜேஷ்குமார் ஆகியோரது வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளப்பட்டது இந்நிலையில்  இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு ஆவது உறுதியாகியுள்ளது.
 

click me!