
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்தையும் நடுங்கச் செய்யும் வல்லமை நாகங்களுக்கு உண்டு. அதுவும் ராஜநாகம் என்றால் என்ன ஆகும் என சொல்லவே தேவையில்லை.
திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் முண்டந்துறை புலிகள் காப்பம் பகுதியில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுவதால்,'கிங் கோப்ரா' எனப்படும் அதிக விஷத்தன்மையுடைய ராஜநாகங்கள் அதிகம் வசிக்கின்றன. நேற்று அம்பாசமுத்திரம், கடையம் வனப்பகுதியில் துளசிதோப்பு என்னுமிடத்தில் பெண் ராஜநாகம் இருப்பதை தொழிலாளர்கள் பார்த்தனர்.
பின்னர் இது குறித்து கடையம் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநர் சே.செண்பகப்பிரியா, மற்றும் பொறுப்பு வனச்சரக அலுவலர் சரவணகுமார் வழங்கிய உத்தரவு மற்றும் அறிவுரையின் பேரில் சிவசைலம்பிரிவு வனவர் முருகசாமி, கோவிந்தபேரி பீட் வனக்காவலர் வீரணன், வேட்டைத் தடுப்புக்காவலர்கள் பேச்சிமுத்து, வேல்ராஜ். வேல்சாமி, மனோஜ்குமார். பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர்.
கடையம் வன ஊழியர்கள் ஒரு மணி நேர முயற்சிக்கு பின் பாம்பை பிடித்தனர். அதனை சிவசைலம் வாழையாறு வனப்பகுதியில் விட்டனர். இது குறித்து சோகோ நிறுவனத்தின் நிறுவனத் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு, தனது ட்விட்டர் பதிவில், '’ஒரு அரிய 12 அடி நீளமுள்ள கிங் கோப்ரவை எங்கள் அற்புதமான உள்ளூர் வனக்காவலர்கள் வந்து அருகில் உள்ள மலைகளில் விடுவிப்பதற்காக பிடித்தனர். இங்கே நான் தைரியமாக அதைத் தொட்டுப்பார்த்தேன் ‘’எனப் பதிவிட்டுள்ளார்.