எடப்பாடிக்கு சவால் விட்டு அதிமுக வேட்பாளரை தோற்கடித்த சுயேட்சை... ஈகோவால் பறிபோன சேந்தமங்கலம்..!

By Asianet TamilFirst Published May 5, 2021, 9:26 AM IST
Highlights

 நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட அத்தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் அதிமுக தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் மழைவாழ் மக்கள் போட்டியிடும் தனித் தொகுதியாகும்.  2016 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சந்திரசேகரன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை. கொல்லிமலையைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவரை மாற்றக்கோரி சந்திரசேகரன் தலைமையுடன் மல்லுக்கட்டிப் பார்த்தார். அது முடியாமல் போனதால் சுயேட்சையாக களமிறங்கினார்.
இதனையடுத்து சந்திரசேகரனை ஓபிஎஸ்-இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினர். இதனால் கடுப்பான சந்திரசேகரன், அதிமுக வேட்பாளரைத் தோற்கடிப்பேன் என அதிமுக தலைமைக்கே சவால்விட்டார். இந்நிலையில் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி 90,681 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரன் 80,188 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்தத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன் 11,371 வாக்குகளைப் பெற்றார்.

அவருடைய இந்த வாக்குப் பிரிப்பால் திமுக வேட்பாளர் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் சவால்விட்டபடி சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தோற்க சந்திரசேகரன் காரணமாக இருந்துவிட்டார். 
 

click me!