கட்சிகளுக்கு வரும் வருமானம்... இந்திய மாநில கட்சிகளில் திமுக டாப்.. வருமானம் கிடுகிடு உயர்வு.!

By Asianet TamilFirst Published May 29, 2022, 8:46 AM IST
Highlights

அதிமுக தற்போது ரூ. 34 கோடியை வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2019-2020ஆம் நிதியாண்டில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ. 89 கோடியை வருமானமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டிய மாநில கட்சிகளில் 2020-21-ஆம் ஆண்டில் திமு.க. முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

ஒவ்வோர் ஆண்டும் அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடைகள், வருமானங்கள், செலவினங்கள் போன்றவற்றை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் மாநில கட்சிகள் சமர்ப்பித்த ஆண்டு வருமான அறிவிப்புகளை டெல்லியில் இயங்கும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2020-2021-ஆம் ஆண்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 31 மாநிலக் கட்சிகளில் அதிக வருமானத்தை ஈட்டிய கட்சியாகவும் செலவினங்களைக் கொண்ட கட்சியாகவும் திமுக உள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த 31 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் 2020-21-ஆம் ஆண்டில் ரூ.529.41 கோடியக இருந்தது. இதில் அதிகபட்சமாக திமுகவின் வருமானம் ரூ.149.95 கோடி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு அடுத்தப்படியாக ஆந்திராவில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ரூ.107.99 கோடி வருமானத்தை ஈட்டியிருக்கிறது. ஒடிஷாவில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பிஜு ஜனதா தளம், கடந்த நிதியாண்டில் ரூ. 73.34 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. அதேபோல இந்த 31 மாநில கட்சிகளும் சேர்ந்து, மொத்தம் ரூ. 414.02 கோடியைச் செலவாக அறிவித்திருக்கின்றன. அதில் திமுகவின் செலவு மட்டும் 52.77 சதவீதம் ஆகும். சுமார் 214 கோடியை திமுக செலவு செய்திருக்கிறது.

அதிமுக ரூ. 42.36 கோடியையும் தெலுங்கு தேசம் கட்சி ரூ. 54.76 கோடியையும் செலவு செய்துள்ளன. மாநில கட்சிகள் தங்களுடைய கட்சிக்கான வருமானமாக 47.34 சதவீதத்தை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றதாக ஆதாரமாகக் காட்டியுள்ளன. இதேபோல 7 தேசியக் கட்சிகளும் 2019-20 ஆண்டில் தங்களுடைய வருமானத்துக்கு ஆதாரமாக 62 சதவீதத்தை தேர்தல் பத்திரங்களைத்தான் காட்டியுள்ளன. தமிழகத்தில் திமுகவின் முந்தைய நிதி ஆண்டு 2019-20-இல் வருமானம் ரூ. 64.90 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 131 சதவீதம் அதிகரித்து ரூ. 149.95 கோடியாக உள்ளது. 

அதிமுக தற்போது ரூ. 34 கோடியை வருமானம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2019-2020ஆம் நிதியாண்டில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ. 89 கோடியை வருமானமாக ஈட்டியதாக தெரிவித்துள்ளது.  தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சிகளான மதிமுக, பாமக ஆகிய கட்சிகளின் வருமானம் கடந்த ஆண்டை விட தற்போது  அதிகரித்துள்ளன. 2019 -20 ஆம் ஆண்டில் மதிமுகவின் வருமானம் ரூ.1.50 கோடியாக இருந்தது. 2020-21 நிதியாண்டில் அது ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல பா.ம.கவின் வருமானம் முன்பு ரூ.55.60 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.1.16 கோடியாக அதிகரித்துள்ளது.

click me!