2026-இல் பாமக ஆட்சி அமைக்கும்.. பூரண மதுவிலக்கை தமிழகத்தில் பாமக கொண்டு வரும்.. புதிய தலைவர் அன்புமணி சூளுரை.!

By Asianet TamilFirst Published May 28, 2022, 10:08 PM IST
Highlights

2026-ஆம் ஆண்டில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும். பாமக மட்டுமே தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும் என்று அக்கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை அடுத்த திருவேற்காட்டில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது, அதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கான தீர்மானத்தை பாமக தலைவர் ஜி.கே மணி முன்மொழிய அக்காட்சி பொதுக்குழு உறுப்பினர்கள் அதை வழிமொழிந்தனர். அதையடுத்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் அன்புமணி ராமதாசை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு வாழ்த்தினார். அப்போது பாமக தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அன்புமணி ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்து ஆரவாரம் செய்தனர். புதிய தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸும் இந்த விழாவில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “அய்யா எனக்கு வழங்கிய மிகப்பெரிய பொறுப்பு தலைவர் பொறுப்பு ஆகும். நான் பாமகவின் தலைவனாக மட்டும் அல்லாமல் கடைக்கோடி தொண்டனாகவும் செயல்படுவேன் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் பொறுப்பை மிகவும் நேர்மையாக நான் செயல்படுத்துவேன். கட்டப் பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையை எடுப்பேன். 2026-ஆம் ஆண்டில் பாமக நிச்சயம் ஆட்சி அமைக்கும். பாமக மட்டுமே தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வரும். பாமக ஜாதிக்கட்சி என்ற மாயயை நாம் தொடர்ந்து உடைத்துக்கொண்டிருக்கிறோம். 

எனக்கு வழங்கியுள்ள புதிய பொறுப்பை நேர்மையாகக் கொண்டு செல்வேன். அதுபோலவே தொண்டர்களும் நேர்மையாக இருக்க வேண்டும். கட்சியில் தவறாக செயல்படும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட  எந்த புகார் கட்சி நிர்வாகிகள் மீது வந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கொள்கைகள், கோட்பாடுகளை கட்டாயம் நான் பின்பற்றுவேன்” என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 
 

click me!