ஒன்றியம், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளால் ஒரு பயனும் கிடையாது.. திமுகவை டாராக்கிய பிரேமலதா விஜயகாந்த்.!

By Asianet TamilFirst Published May 28, 2022, 9:28 PM IST
Highlights

இந்த ஓராண்டில் எந்தச் சாதனையும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள். ‘ஒன்றிய அரசு, திராவிட மாடல்’ என்று இந்த விழாவில் மு.க. ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு பாஜகவினர் இந்த விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளது. தவிர, எந்தக் காட்சிகளுமே மாறவில்லை. இந்த ஓராண்டில் எந்தச் சாதனையும் தமிழகத்தில் நடைபெறவில்லை. திமுகவினர் ஒன்றியம், திராவிட மாடல் என்று பேசுகிறார்கள். இந்த வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. 

எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்வி குறியாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விசராணைக் கைதிகளைக் கூட கொல்லும் நிலைதான் உள்ளது. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொலுசு, பணம் அளித்தார். இதைத் தவிர அவர் வேறென்ன செய்தார்? இதை மக்கள்தான் கேள்வியாக கேட்க வேண்டும். கோவையில் சாலை வசதி, சாக்கடை வசதி என எதுவுமே இங்கு சரியில்லை. மக்கள் தெளிவடைந்தால்தான் எல்லாமே இங்கு மாறும்.

கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த அவைத் தலைவர் ரமேஷின் மனைவி விபத்தில் உயிரிழந்திருக்கிறார்ர். இந்த விபத்துக்கு போக்குவரத்து விதிமீறல்தான் காரணம். குறிப்பிட்ட நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் இங்கு கனரக வாகனங்கள் இயங்குவதே இந்த விபத்துக்குக் காரணம். இதற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

click me!