
சசிகலாவுடன் தொடர்புடைய அத்தனை இடங்களிலும் அதிரடியாக சோதனை நடத்திவரும் வருமான வரித்துறையினர், அவரது கணவர் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் மட்டும் சோதனை நடத்தவில்லை.
ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா டிவியின் சிஇஓ விவேக்கின் வீடு, புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தினகரனின் பண்ணை வீடு, மன்னார்குடியில் உள்ள தினகரனின் வீடு, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு, திவாகரனின் பண்ணை வீடு, நாமக்கல்லில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு, திவாகரனின் நண்பர் வீடு, பெங்களூருவில் உள்ள புகழேந்தியின் வீடு, போயஸ் கார்டன், கோடநாடு பங்களா என சசிகலாவுக்கு தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவுடன் எந்த வகையிலாவது தொடர்புடையவர்களாக இருந்தால் அவர்கள் அனைவரின் வீடுகளிலும் பாரபட்சமின்றி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திவாகரனின் நண்பர்களின் வீடுகள் வரை சோதனை நடத்தும் வருமான வரித்துறை சசிகலாவின் கணவர் நடராஜனின் சென்னை வீட்டில் சோதனை நடத்தவில்லை.
சசிகலாவின் குடும்பத்தைச் சுற்றியே நடத்தப்பட்டு வரும் சோதனையில் அவரது கணவர் நடராஜனும் நடராஜனின் குடும்பத்தினரும் சிக்கவில்லை. சென்னை பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் வீடு, சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள நடராஜனின் சகோதரர் ராமச்சந்திரனின் வீடு ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை.
அதேபோல, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா ஆகியவற்றிலும் வருமான வரி சோதனை நடத்தப்படவில்லை.
போலி நிறுவனங்கள் மூலம் நஷ்ட கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதேநேரத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என தினகரனும் திவாகரனும் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்கள் மற்றும் செயல்படுபவர்கள் மீது வருமான வரித்துறை ஏவிவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. அதேபோன்றதொரு ஏவல்தான் தற்போதும் நடந்திருக்கிறது என தினகரன் தரப்பு குற்றம்சாட்டுகிறது.
இந்நிலையில், சசிகலாவின் குடும்பத்தினரும் சசிகலாவை சார்ந்தவர்கள் மட்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நடராஜனும் அவரது குடும்பத்தினரும் சோதனையில் சிக்காதது மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு தமிழகத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி மிகவும் நெருக்கமானவர். ஆசீர்வாதம் ஆச்சாரி, பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவர். அந்த அடிப்படையில், நடராஜன் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் ஆகியோர் வருமான வரி சோதனையில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.