
சென்னை பெரப்பூர் எஸ் 2 சினிமாஸ் உரிமையாளர் வீடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையின் தொடர்ச்சி இது என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 9 ஆம் தேதி ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் பத்திரிக்கை அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடுகள், அலுவலகங்கள், கோடநாடு எஸ்டேட் போன்ற 187 இடங்களில் 1800 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் அதிகமாக இளவரசியின் மகன் விவேக்கை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனம், சத்யம் சினிமாஸ் உரிமையாளரிடம் இருந்து வாங்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்த அது தொடர்பாக விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சோதனையின் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் பெரம்பூர் எஸ் 2சினிமாஸ் உரிமையாளர் வீடு உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்யம் சினிமாஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான தியேட்டர்கள், அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.