
திருச்சி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று டிசம்பர் 1-ஆம் தேதி அறிவிக்கிறேன் என்று திருச்சியில் டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக-வில் பிளவு ஏற்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஓர் அணியாகவும், சசிகலா தலைமையில் டி.டி.வி.தினகரன் தரப்பினர் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எடப்பாடி பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 21-ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு விடுதியில் நேற்று மாலை நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியது: “வருகிற 29-ஆம் தேதி (நாளை) கழக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆசி பெற உள்ளேன். இதனைத் தொடர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி காலை சென்னையில் ஆட்சி மன்றக்குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, பிரசாரமும் தொடங்கும். வருகிற 3-ஆம் தேதி முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் முழு வீச்சில் பிரசார பணிகள் நடைபெறும்.
மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆர்.கே.நகர் தொகுதியில் நமது வேட்பாளர் வெற்றிக்காக பாடுபட வேண்டும்“ என்று பேசினார்.