
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக மற்றும் ஆட்சி தொடர்பான விபரங்களை ஜெயா டி.வி.ஒளிபரப்பி வந்தது. அவரது மறைவுக்குப்பின் ஜெயா தொலைக்காட்சி டி.டி.வி.தினகரன் அணியினரின் கைட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இளவரசியின் மகன் விவேக் ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார் . எடப்பாடி பழனிசாமி சசிகலா அணியில் இருந்தது பிரிந்த பின் அரசுக்கு எதிரான செய்திகள் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டு வந்ததது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த 10 வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரி தொடர்பான விபரங்களை முறையாக தெரிவிக்கத் தவறிய காரணத்தால் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயா தொலைக்காட்சி தவிர, அது தொடர்பான பிற நிறுவனங்களிலும் சோதனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.