கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய வருமான வரித்துறை !! அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அதிரடி !!

Published : Apr 12, 2019, 11:51 PM ISTUpdated : Apr 12, 2019, 11:53 PM IST
கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய வருமான வரித்துறை !! அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அதிரடி !!

சுருக்கம்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அரசு ஒப்பந்ததாரர் பெரியசாமியின் வீடு, அலுவலகம் உள்பட 18 இடங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 14.54 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

தமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக வருமானவரித் துறை புலனாய்வு பிரிவின் சார்பில் கருப்புப் பண நடமாட்டத்தை தடுக்கும் வகையிலும், பணம் பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, மக்களிடம் புகார் பெற்று வருகிறது.

வேலூா் காட்பாடி பகுதியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர் வீடுகளில் சில நாள்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.11.58 கோடி பறிமுதல் செய்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரான நாமக்கல் மாவட்டம் நடுக்கோம்பை பகுதியைச் சோ்ந்த பி.எஸ்.கே. பெரியசாமி அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு பெருமளவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் பெரியசாமி, அவரது மகன்கள் அருண்குமார், அசோக்குமார் ஆகியோர் வீடுகள், அலுவலகங்கள், பொறியியல் கல்லூரி, நூற்பாலை என தமிழகம் முழுவதும் 18 இடங்களில் வருமானவரித் துறையினர் இன்று வெள்ளிக்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில், கணக்கில் வராத கட்டுக்கட்டாக இருந்த ரூ. 14.54 கோடி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்படும் பணம், ஆவணம் அடிப்படையில் வருமானவரிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என வருமானவரித் துறையினா் தெரிவித்தனர். 

எந்த தேர்தல் கால வரலாற்றிலும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் பதுக்கல் பணத்துக்கு எதிராக வருமானவரித் துறையினரின் அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!