
அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று சென்னை வருமான வரித்துறை முன்பு ஆஜராகி விளக்கமளிக்கின்றனர்.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது. அங்கு வாக்காளர்களுக்கு கடந்த வாரம் ஆளும் கட்சி சார்பில் தலா 4 ஆயிரம் ரூபாய் பணம்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7–ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினார்கள். சென்னையில் உள்ள அரசு பங்களாவில் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு, சென்னை, திண்டுக்கல், நாமக்கலில் உள்ள அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு, திருச்சியில் உள்ள குவாரி ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், சுமார் 6 கோடி ரூபாய் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரமும் சிக்கியது.
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டிலும், சாலிகிராமத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
சோதனையில் சிக்கிய ஆவணங்களின் விவரம், பணம் போன்றவை குறித்து பட்டியலிட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை தயாரித்தனர். இந்த அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கும் இ–மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோருக்கு இன்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதா லட்சுமி ஆகியோரிடம் தனித்தனி அறையில் வைத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணையின்போது, ஒவ்வொருவரது வீட்டில் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அதை நிரூபிக்க சில ஆதாரங்கள் தேவைப்படும் பட்சத்தில் அதை அளிக்க அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும்.
3 பேரிடமும் விசாரணை நடந்து முடிந்த பிறகு, அவர்கள் அளித்த வாக்குமூலத்தை அறிக்கையாக தயார் செய்து , டெல்லியில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். தேவைப்பட்டால், அமலாக்கப் பிரிவு விசாரணையும் நடைபெறும் என தெரிகிறது..
இன்று காலையில் ஆஜராகும் அமைச்சரிடம் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டு அவரை திக்குமுக்காட செய்ய வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் தங்களது கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அவரை கைது செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன…