கரூர் ஐடி சோதனையில் சிக்கிய டாஸ்மாக் வசூல் ஆவணங்கள்..? செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடி

By Ajmal Khan  |  First Published Jul 12, 2023, 10:58 AM IST

செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் 3 வது கட்டமாக நடைபெற்ற சோதனையில் டாஸ்மாக் வசூல் விபரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கரூரில் தொடரும் வருமான வரி சோதனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், உரிய வகையில் வரி செலுத்தவில்லையென கூறி  கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், அரசு ஒப்பந்ததாரர் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் சுமார் 8 நாட்கள் சோதனை நடத்தினர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் சீல் வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருந்தனர்.  இதற்கிடையே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. 

Latest Videos

undefined

3 வது கட்டமாக வருமான வரித்துறை சோதனை

இந்த பரபரப்பான நேரத்தில் இரண்டாவது கட்டமாக கரூரில் 10 இடங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றி வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 3 நாட்கள் சோதனை நடைபெற்ற இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து, நேற்று 3வது கட்டமாக கரூரில் 12 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. கொங்கு மெஸ் மணி, அவருக்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள், பால விநாயகா கல்குவாரி தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடைபெற்ற சோதனையை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்தநிலையில் இந்த சோதனையின் போது டாஸ்மாக் வசூல் விபரங்கள், ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய ஆவணங்கள் சிக்கியது.?

மேலும் யாரிடம் எவ்வளவு தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. என்ற விவரங்கள் கணினியில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அமலாக்கத்துறை கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை வருமான வரித்துறையினர் தற்போது கண்டறிந்துள்ள ஆவணங்கள் மூலம் மேலும் சிக்கல் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த விரைவில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு வருமான வரித்துறை சம்மன் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

பாஜகவை வீழ்த்த திட்டமிடும் எதிர்கட்சிகள்.! பெங்களூரில் திரளும் 24 கட்சிகள்- மதிமுக, விசிகவிற்கும் அழைப்பு
 

click me!