
பாஜகவை விமர்சித்துப் அண்ணன் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அதிமுகவை பற்றி பாஜக துணைத் தலைவர் வி.பி துரைசாமி பேச தேவையில்லை அவர் எங்கிருந்து வந்தார் என்பது ஊருக்கே தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பாஜக கூட்டாக தேர்தலை சந்தித்து வருகின்றன. ஆனால் எதிர்க் கட்சியாக அதிமுக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் களம் அதிமுக-பாஜக என்ற நிலைக்கு மாறி வருகிறது என்றும் பேசி வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாஜக பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பெற்றுள்ளது என்பதை மேடைதோறும் பாஜகவினர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையன், தமிழ்நாட்டில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக வளர முயற்சிக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக பாஜக குரல் கொடுப்பதில்லை, ஆனால் தொடர்ந்து அதிமுகவை பின்னுக்கு தள்ளி விட்டதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்பிரச்சாரங்களை அதிமுக தொழில்நுட்ப பிரிவு அம்பலப்படுத்த வேண்டும் என பேசினார். மேலும் தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி பாஜகதான் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள், பாஜகவுக்கு தெரியாமல் இது பரப்பப்படுகிறதா? 25 நாடாளுமன்ற தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்கிறார்கள் அப்படியானால் அதிமுக மூன்றாவது இடமா என அவர் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இது பாஜக அதிமுக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியது, பொன்னையனின் கருத்துக்கு பாஜக துணைத் தலைவர் வி.பி துரைசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்றோர் காட்டமாக பதில் அளித்திருந்தனர். இந்நிலையில் பாஜகவினரை சமாதானப்படுத்தும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தொடர்பாக அண்ணன் பொன்னையன் பேசியது கட்சியின் கருத்து அல்ல, அது அவரின் சொந்த கருத்து என்றார். மேலும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒழுங்காக தனது பணியை செய்யவில்லை, அதேபோல் காவல்துறையில் திமுகவினரின் தலையீடு அதிகமாக உள்ளது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது.
காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை நடக்கிறது. அதேபோல் பாஜக துணைத் தலைவர் வி.பி துரைசாமி அதிமுக குறித்து கருத்து சொல்ல வேண்டியதில்லை, அவர் எங்கிருந்து சென்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். உதயநிதிக்கு நேரடியாக அமைச்சர் பதவி கொடுத்தால் விமர்சனம் எழும் என்பதால் கொல்லைப்புறமாக அமைச்சர் சீட்டு வழங்க முதல்-அமைச்சர் முயன்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார் .