அடுத்தடுத்த 4 பேர் 'திடீர்' ராஜினாமா...யோகிக்கு அதிர்ச்சி கொடுத்த 'சமாஜ்வாடி'.. உ.பி தேர்தல் ட்விஸ்ட் !!

By Raghupati RFirst Published Jan 12, 2022, 11:52 AM IST
Highlights

உத்தரப் பிரதேசத்தில் ஒரு அமைச்சர் உள்பட 4 எம்எல்ஏக்கள் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர்.இது பாஜகவுக்கு பெரும் சறுக்கலாக அமைந்து இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என்று பல கட்சிகள் இருந்தாலும் சமாஜ்வாதி, பாஜக இடையேதான் அங்கே முக்கிய போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், மொத்தம் 4 தலைவர்களை சமாஜ்வாடிக் கட்சியிடம் பறி கொடுத்துள்ளது பாஜக. 

இதில் முக்கியமானவர் சுவாமி பிரசாத் மெளர்யா. இவர் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஆவார். பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களிடையே பிரபலமானவர். இவரை சமாஜ்வாடிக் கட்சி தன் வசம் இழுத்திருப்பது அக்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. யோகி அமைச்சரவையில் தொழிலாளர், வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருந்தவர் மெளர்யா. அமைச்சரவையிலிருந்து விலகி விட்ட அவர் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து கட்சியி்ல இணைந்து விட்டார். 

இதுதொடர்பாக மெளர்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தலித்துகள், ஓபிசி , விவசாயிகள், வேலையில்லாதோர், சிறு வணிகர்கள் என அனைவரையும் முடக்கி விட்டார் யோகி ஆதித்யநாத். இதனால் விலகுகிறேன்’ என்று கூறியிருக்கிறார். இந்த விலகல் முடிவை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் அகிலேஷிடம் போய்ச் சேர்ந்து விட்டார் மெளர்யா. 'சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் போராடிய மெளர்யாவை மனப்பூர்வமாக வரவேற்பதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

இவர் கட்சி தாவுவது இது முதல் முறையல்ல. பலமுறை மாறியிருக்கிறார். முன்பு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். 2016 தேர்தலில் அதிலிருந்து விலகி தனி அமைப்பை ஏற்படுத்தினார். லோக்தந்திரிக் பகுஜன் மன்ச் என்று அதற்குப் பெயர். பின்னர் யோகியைச் சந்தித்து பாஜகவில் இணைந்து 2017ல் அமைச்சரானார். மெளர்யாவின் மகள் சங்கமித்ரா மெளர்யா, பாஜக எம்பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் பதான் தொகுதி எம்.பியாக இருக்கிறார். கிழக்கு உ.பியில் உள்ள பத்ரானா சட்டசபைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மெளர்யா, ஓபிசி மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பதும் முக்கிய விஷயம். மெளர்யா தவிர மேலும் 3 பாஜக எம்எல்ஏக்களும் கட்சியை விட்டு விலகி அகிலேஷ் யாதவுடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய 5 பேரும் வலுவான ஓபிசி தலைவர்கள். உத்தர பிரதேசத்தில் பாஜக ஒரு ஓபிசி பிரிவினருக்கான கட்சி என்ற பிம்பம் உள்ளது. ஆனால் அதையும் மீறி பாஜக ஓபிசி பிரிவு வாக்குகளையும், எஸ்டி/எஸ்சி பிரிவு மக்களின் வாக்குகளையும் பெற அக்கட்சியில் இருக்கும் சில தலைவர்களே காரணம். இந்த 4 பேரின் ராஜினாமா பாஜகவுக்கு மட்டுமல்ல, யோகி ஆதித்யநாத்துக்கும் பெரிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. உபியின் இந்த தேர்தல் ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.

click me!