நீங்கள் மட்டும்தான் செங்கல் தூக்கி காட்டுவீங்களா.? நாங்களும் காட்டுவோம்.. உதய்யை தெறிக்கவிட்ட அர்ஜூன் சம்பத்.

By Ezhilarasan BabuFirst Published Jan 12, 2022, 11:29 AM IST
Highlights

அரசு நினைத்திருந்தால் இந்த பொருட்களை தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளிடமிருந்தும், குடிசைத் தொழில் செய்பவர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்திருக்கலாம், ஆனால் இவைகள் எங்கோ இருந்து வாங்கப்பட்டுள்ளது. 

நீங்கள் மட்டும்தான் செங்கல் தூக்கி காட்டுவீர்களா நாங்களும் நீங்கள் கொடுத்த தரமற்ற பொங்கள் பரிசுகளை தூக்கி காட்டுவோம் என அர்ஜுன் சம்பத் திமுக இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி  ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை விமர்சித்துள்ளார். அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வரும் நிலையில், அந்தப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல்  அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அது ஒவ்வொன்றையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். கொரோனா மற்றும் மழை வெள்ளத்தின்போது அரசு செயல்பட்ட விதம் மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் அதிமுக பாஜக   உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.  அதிமுக எதிர்கட்சியாக இருந்தாலும், உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல பல ஹிந்து இயக்கங்களும் திமுக அரசையும் முதல்வர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக இந்து மக்கள் கட்சி  திமுக அரசை விமர்சிப்பது அதிக முனைப்பு காட்டி வருகிறது.

அந்த வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகளில் வழங்கிவரும் பொருட்கள் குறித்து இந்து மக்கள் கட்சி கடுமையான விமர்சனங்கள் முன் வைத்துள்ளது. ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் எதுவுமே தரமானதாக இல்லை எனவும், அந்த பொருட்கள் அனைத்தும் வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு, கல்வியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் அவர்  வழங்கியுள்ள பொங்கல் பரிசுகள் அனைத்திலும் இந்தியில் அச்சிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்களில் இடம்பெற்றுள்ள விலைக்கும், கொள்முதல் செய்துள்ள விலைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது.  இந்தப் பொருட்களின் விலைக்கும் மார்க்கெட் விலைக்கும் 200 ரூபாய் வித்தியாசம் வருகிறது.  கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பணமாக கொடுத்தார். ஆனால் இந்த ஆட்சியில் பணமும் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட பொருட்களும் தரமானதாக இல்லை.

அரசு நினைத்திருந்தால் இந்த பொருட்களை தமிழ்நாட்டில் இருக்கிற விவசாயிகளிடமிருந்தும், குடிசைத் தொழில் செய்பவர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்திருக்கலாம், ஆனால் இவைகள் எங்கோ இருந்து வாங்கப்பட்டுள்ளது. திமுகவின் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். பொங்கல் பரிசாக 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் கோரிக்கை வைத்தார், ஆனால் இப்போது அவரே அமைச்சராக இருக்கிறார். அவர் ஏன் இப்போது அந்த தொகையை வழங்கவில்லை?  என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. தயவுசெய்து இனி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். உதயநிதி அவர்கள் பிரச்சாரத்தில் பேசும்போது நகை வைத்திருப்பவர்கள் உடனே அடமானம் வையுங்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் தள்ளுபடி செய்வோம் என கூறினார். 

அதேபோல் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள், நகைக் கடன்களை தள்ளுபடி செய்துவீட்டீர்களா? ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள்? உதயநிதி பிரச்சாரத்தின்போது செங்கல் தூக்கி காட்டினார், இதோ நாங்களும் இப்போது இந்த ரேஷன் பொருட்களை தூக்கி காட்டுகிறோம், இதெல்லாம் தரமானதுதானா? என காட்டுகிறோம், செங்கல் சிமெண்ட் மற்ற மாநிலங்களில் என்ன விலைக்கு விற்கிறது, தமிழகத்தில் அதன் விலை என்ன? கட்டுமான பொருட்களின் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது ஆனால் ஆளுநர் உரையில் இதுபற்றியெல்லாம் எதுவுமே இல்லை. மொத்தத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார். 
 

click me!