
திமுகவின் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி மீது, தெலங்கானாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி உண்டியல் குறித்த கனிமொழியின் சர்ச்சைக்குரிய கருத்தை அடுத்து அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழகம் சார்பில், அண்மையில் தருச்சியில் உலக நாத்திக மாநாடு நடந்தது. இதில் திமுகவின் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது, திருப்பதி கோயில் நிர்வாகம் குறித்தும், அதன் பராமரிப்பு குறித்தும் மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால், கடவுள் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
திருப்பதி கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல், அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர் இருக்கிறார்கள். உண்மையில், கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலைப் பாதுகாப்பரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்? என்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா? என்றும் பேசியிருந்தார்.
கனிமொழியின் இந்த பேச்சை தொடர்ந்து, இந்து முன்னணி அமைப்பு சார்பில் சென்னை, போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஐதராபாத்தில் உள்ள சயிதாபாத் நகர், போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர் கருணாசாகர், கனிமொழி மீது நடவடிக்கை எடுக்க வலிறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், தெலங்கானாவில் உள்ள கரீம்நகர் காவல் நிலையத்தில் கனிமொழி எம்.பி. மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.