
சட்டமன்ற தேர்தல் படு தோல்வி, உடல் நல குறைபாடு என்று பல பிரச்னைகளால் தீவிர அரசியலுக்கு லீவு விட்டிருந்தார் விஜயகாந்த். சில மாதங்களுக்கு முன்புதான் மெல்ல வெளியே தலை காட்ட துவங்கினார். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக செல்லும் விஜயகாந்த், அந்த மாவட்டத்திலுள்ள முக்கிய பிரச்னைகளை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்துவதை தனது ஸ்டைலாக வைத்திருக்கிறார். சக்ஸஸ் ஆகிறதோ இல்லையோ ஆனால் இப்போதைக்கு கேப்டனுக்கு இதுதான் அரசியல், வேறு வழியில்லை.
அந்த வகையில் விழுப்புரத்தில் கரும்பு விவசாயிகளுக்கான ஆர்பாட்டம், உடுமலை பேட்டையில் ஆனைமலை-நல்லாறு விவகாரம் என்று வரிசையாக கோல் போட்டவர் ஞாயிறன்று சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்காக நடந்த ஆர்பாட்டத்தில் கலக்கலாக கலந்து கொண்டார்.
சிவகாசிக்கு செல்லும் முன்பாகவே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார் விஜயகாந்த். வைரமுத்து விவகாரத்தால் சென்சிடீவ் இடமாக மாறி நிற்கிறது ஸ்ரீவில்லிப்புத்தூர், அங்கே சென்றதன் மூலம் தனி பரபரப்பை கிளப்ப விஜயகாந்த் முயன்றது ஹைலைட். கோவிலில் சாமி தரிசனம் முடித்தவர் ‘ஆண்டாள் என் தாயார்! ஆம் என் அம்மா பெயர் ஆண்டாள்தான். அன்று இந்த ஆண்டாளை வணங்கியதால் எதிர்கட்சி தலைவரானேன், இப்போது மறுபடியும் இவளை வணங்குவதால் முதல்வராவேன்.
வைரமுத்துவுக்கு எதிரான ஜீயரின் போராட்டத்தை தே.மு.தி.க. ஆதரிக்கிறது.” என்று பட்டாசை ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பற்றவைத்தவர் சிவகாசி மேடையில் பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னை பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மேடைக்கு அருகே கூட்டத்துக்குள் டைல்ஸ் கற்களின் சில துண்டுகள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. இதனால் பரபரப்பானது. விஜயகாந்தும் சட்டென்று கண் சிவந்தார். போலீஸ் விசாரித்ததில் பக்கத்து வீதியில் கற்களை தூக்கி எறிந்து விளையாடி சிறுவர்கள் தவறுதலாக இங்கே வீசிவிட்டார்கள் என்று பிரச்னையை முடித்தார்கள்.
ஆனால் இதை நம்பாமலேயேதான் மேடையை விட்டு இறங்கினார் கேப்டன்.