வேட்பாளரை இன்னும் அறிவிக்காத காங்கிரஸ்.! நெல்லை,மயிலாடுதுறையில் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் திமுக

By Ajmal KhanFirst Published Mar 25, 2024, 7:25 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நாளை மறுதினத்தோடு நிறைவடைய உள்ளது. ஆனால் இன்னும் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடவுள்ள இரண்டு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காதது, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஒரு பக்கம் திமுக தலைவர் ஸ்டாலின், மறு பக்கம் உதயநிதி களத்தில் இறங்கியுள்ளனர். ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எப்போதும் போல் வேட்பளார்களை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. தொகுதி எண்ணக்கையை இறுதி செய்யவும் காலம் தாழ்த்தியது. தற்போது வேட்பாளர்களை அறிவிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 7 தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். ஆனால் திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதியில் இன்னமும் வேட்பாளர் அறிவிக்கவில்லை.

 காங்கிரஸ் நிர்வாகிகள் மோதல்

மயிலாடுதுறையை பொறுத்தவரை ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோர் சீட் கேட்டு முயற்சி செய்வது வருகிறார்கள். இதன் காரணமாக யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதே போல திருநெல்வேலி தொகுதி இந்த தொகுதியில் பாஜகவில் பலம் வாய்ந்த நயினார் நாகேந்திரன் களம் இறங்கியுள்ளார்.

இவருக்கு எதிராக அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட சிம்லா முத்து சோழன் மாற்றப்பட்டு ஜான்சி ராணி நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் திமுக கூட்டணியான காங்கிரஸ் இங்கும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. திருநெல்வேலி தொகுதி பொறுத்த வரை காங்கிரஸ் வேட்பாளராக தென்காசியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ராமசுப்பு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனின் மகன் அசோக்,  களக்காடு பகுதியில் சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் சீட் கேட்டு காங்கிரஸ் மேலிடத்தில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

குழப்பத்தில் திமுக

இதில் பால்ராஜ் என்பவருக்கு வாய்ப்பு தரப்படலாம் என கூறப்பட்ட நிலையில்,  காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இத்ன் காரணமாக இன்னும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் இன்று திமுக தலைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் திருநெல்வேலி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஆனால் வேட்பாளரே இல்லாமல் எப்படி பிரச்சாரம் மேற்கொள்வது என்று திமுகவினர் குழப்பத்தில் உள்ளனர். 

click me!