எம்.எல்.ஏ.,க்களுக்கு பதில் சொல்லியாகணும்... ஒரு மாதம் விட்டுடுங்க... அமலாக்கத்துறையிடம் அமைச்சர் வேண்டுகோள்

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2021, 12:53 PM IST
Highlights

சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும். எனவே இன்று ஆஜராவதில் இருந்து ஒரு மாத காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

இரண்டு பண மோசடி வழக்குகளை மையமாக வைத்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் இந்த  விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து ஒரு மாதம் விலக்கு அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். 

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அ.தி.மு.க. ஆட்சியில் சில ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார் செந்தில்பாலாஜி. அப்போது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செந்தில் பாலாஜி, பலரிடமும் பணமோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இரண்டு பண மோசடி வழக்குகளை மையமாக வைத்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது அமலாக்கத்துறையினர் சம்மன் அடிப்படையில் ஆஜராவதற்கு ஒரு மாத காலம் விலக்கு அளிக்க வேண்டும் என்று மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் நான் தற்போது மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்து வருகிறேன். மேலும் நாளை முதல் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி தொடர்ந்து 29 நாட்கள் வரை நடைபெற இருக்கிறது.

இதில் பல்வேறு விவாதங்களும் இடம் பெறுகிறது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும். எனவே இன்று ஆஜராவதில் இருந்து ஒரு மாத காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
 

click me!