
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக-வும் அதிமுக-வும் படுதோல்வி அடைந்துள்ளன. இங்கு காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் மேடைக்கு மேடை, பேட்டிக்கு பேட்டி என பொளந்து கட்டுபவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். தனது ஒவ்வொரு பேட்டியிலும் இதை சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் தமிழகத்தில் அது தலைகீழாக நின்றாலும் நடக்காது என்பது பாஜகவுக்கே தெரியும். தமிழக மக்களின் மனநிலைக்கு எதிராகவே பாஜக நடந்து வருவதால் தமிழகம் மட்டுமல்ல உலகில் தமிழகர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் பாஜகவை எதிர்த்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தில் அல்ல தமிழர்கள் வாழும் எந்த பகுதியிலும், பா.ஜ.க.வின் தாமரை மலரவே முடியாது என்பதை அடித்துக் கூறியிருக்கிறது கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள்.
கர்நாடக மாநிலத்திலுள்ள காந்திநகர், சி.வி. ராமன் நகர், புலிகேசி நகர்,சர்வக்ஞா நகர், சிவாஜி நகர், சிக்பேட்,சாந்தி நகர், கோலார் தங்கவயல், ஹனூர் ஆகிய தொகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கு பலம் வாய்ந்தவையாக தமிழர்களின் வாக்குகள் உள்ளன.
இந்நிலையில், சி.வி. ராமன் நகர், சிக்பேட் தொகுதிகளைத் தவிர, மற்றஅனைத்துத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக புலிகேசி நகரில் காங்கிரஸ் 97 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற, பாஜக-வுக்கு வெறும் 9 ஆயிரம் வாக்குகளே கிடைத்துள்ளன.
சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் - பாஜகவுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமாகும். இதேபோல சிவாஜி நகரில்15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சாந்தி நகரில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் பாஜக தோற்றுள்ளது.
இதேபோல தமிழகத்தில் பாஜக-வின் ஏவல் கட்சியாக மாறியுள்ள அதிமுக, பெங்களூரிலுள்ள காந்தி நகர்,கோலார் மாவட்டத்திலுள்ள தங்கவயல், சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள ஹனூர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தது.அவர்கள் மூவருமே மிகமிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளனர்.
ஹனூரில் அதிமுக-வின் விஷ்ணுகுமாருக்கு 503, காந்தி நகரில் போட்டியிட்டயுவராஜூவுக்கு 545, தங்கவயலில் போட்டியிட்ட எம். அன்பு-வுக்கு 1024 எனசொற்ப வாக்குகளே கிடைத்துள்ளன.
மத்திய அரசின் திட்டங்கள் என்ற பெயரில் தமிழகம் மீதான தாக்குதல்களுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் குரல் கொடுப்பார்கள். அந்த வகையில், கர்நாடகாவில் தேர்தல் வழியாக அந்தக் குரல் ஒலித்திருக்கிறது.