
அறிக்கை அரசியல் மட்டும் நடத்தி தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்து விட முடியாது என தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. இதில், நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்றதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில கருத்துக்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் இணைந்து நடத்திய இந்த போராட்டம், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழிசை சௌந்தர்ராஜன், கதைக்கு உதவாத வாதங்களை முன் வைக்கிறார்.
காவிரி விவகாரத்தில் திமுக நடத்திய சட்ட போராட்டங்களையும், அதன் மூலம் பெற்ற வெற்றிகளையும் மறந்து விட்டு தமிழிசை பேசுகிறார்.
முன்னாள் பிரதமர்கள் விபி சிங், மன்மோகன் சிங் ஆட்சி காலங்களில் விவசாய கடன்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது போல், தற்போது விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடியை, தமிழக பாஜக தலைவர் என்ற முறையில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஏன் வலியுறுத்தவில்லை.
அறிக்கை அரசியல் மட்டும் நடத்தி தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்து விட முடியாது என குறிப்பிட்டுள்ளார்.