எடப்பாடியார் தாயார் குறித்து விதிகளை மீறி நான் பேசவில்லை... தேர்தல் ஆணையத்திடம் ஆ.ராசா விளக்கம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 31, 2021, 3:32 PM IST
Highlights

பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. அரசியல் தொடர்பான ஒப்பீடுகளை மட்டுமே பேசினேன்.

’’பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. அரசியல் தொடர்பான ஒப்பீடுகளை மட்டுமே பேசினேன்’’ என எடப்பாடியாரின் தாய் குறித்த சர்ச்சைப்பேச்சுக்கு தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளித்துள்ளார் திமுகவை சேர்ந்த ஆ.ராசா.

எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி சர்ச்சையாக பேசியதற்காக மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்தார். இதுதொடர்பாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, “எனது பேச்சு, தனி மனித விமர்சனம் அல்ல. பொதுவாழ்வில் உள்ள 2 ஆளுமைகளின் மதிப்பீடு தான். முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. என்னால் முதலமைச்சர் கண்கலங்கினார் என்பதை கேட்டு மனம் வேதனை அடைந்தேன். எனது பேச்சால் முதலமைச்சர் உள்ளபடியே காயப்பட்டு இருந்தால் மனம் திறந்து மன்னிப்புக் கோருகிறேன்”என்று தெரிவித்தார்.

இதனிடையே ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய் மாலிக் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், ‘தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதில், குறிப்பிட்ட ஒரு விதியில் கட்சிகளும் வேட்பாளர்களும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மற்றும் அவரது பொதுவாழ்க்கைக்கு சம்பந்தப்படாத செயல்பாடுகள் பற்றி விமர்சிக்கக்கூடாது. 

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த விதி வலியுறுத்துகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ஆயிரம்விளக்கு தொகுதியில் 26-ந் தேதி பிரசாரம் மேற்கொண்டு இருந்த போது ஆ.ராசா, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறாக பேசியதாக புகார் பெறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் பெறப்பட்டது. அதில் உங்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உங்களது இந்த பேச்சை தேர்தல் ஆணையம் கவனித்து பார்த்ததில் நீங்கள் அவதூறாக மட்டும் அல்ல, ஆபாசமாகவும் ஒரு பெண்ணின் தாய்மையை குறைத்தும் பேசி தேர்தல் நடத்தை விதிகளை மிக மோசமாக மீறியிருப்பது தெரிகிறது. எனவே, உங்கள் தரப்பு கருத்தை இன்று மாலை 6 மணிக்குள் நீங்கள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இது பற்றி மேலும் உங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்”என்று தெரிவித்திருந்தது.

 

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா இன்று விளக்கம் அளித்தார். அதில், “பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை. அரசியல் தொடர்பான ஒப்பீடுகளை மட்டுமே பேசினேன். வேறு எந்த உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் பேசவில்லை. அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். 

எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள். எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது என்பது தெரியும். முதலமைச்சர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜக வினர் திரித்து பரப்புகின்றனர். முதலமைச்சரை விமர்சித்த விவகாரத்தில் திட்டமிட்டு என் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தனது விளக்கத்தை பேக்ஸ் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளார். 
 

click me!