
பாஜகவுக்கு ஆதரவாக இளையராஜா கருத்து தெரிவித்துள்ள நிலையில், " கருப்பு திராவிடன்... கர்வ தமிழன்" என அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இன்ஸ்டாவில் கருத்து பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இளையராஜாவின் கருத்துக்கு பதிலடியா என்ற கேள்வி எழுந்துள்ளது. யுவனின் இந்த கருத்து குறிப்பாக பாஜகவை அதிர்ச்சயடைய வைத்துள்ளது. இளையராஜாவின் பாஜக ஆதரவு கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வந்தவர்கள் தற்போது யுவன் சங்கர் ராஜாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். தேசிய அளவில் ஆரியம்- திராவிடம் என்ற மோதல் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இவ்விரு தத்துவங்களும் அரசியல் மயமாகி உள்ள நிலையில் இத்தத்துவங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இதில் எவர் ஒருவரும் பேசும் கருத்துக்கள் பெரும்பாலும் இவ்விரு சித்தாந்தத்தை தழுவிய அடையாளப்படுத்துகின்றன அல்லது அடையாளப்படுத்தி பார்க்கப்படுகிறது. ஆரிய சித்தாந்தம் என்பது முழுக்க முழுக்க வலதுசாரி சிந்தனையாகவும், திராவிடம் என்பது இடதுசாரிய சித்தாந்தத்தை ஒட்டியும் அடையாளப்பட்டு நிற்கிறது. இந்நிலையில்தான் இசைஞானி இளையராஜா தெரிவித்த ஒரு கருத்து அது வலதுசாரி கருத்தாக, பாஜகவுக்கு ஆதரவான கருத்தாக்க அடையாள பட்டுள்ளது. அம்பேத்கருடன்-மோடியை ஒப்பிட்டு அவர் புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முகப்புரைதான் அது .
அதாவது அம்பேத்கர் கண்ட கனவை மோடி சாத்தியமாக்கி வருகிறார், அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என இளையராஜா கருத்து கூறியுள்ளார். இதை இடதுசாரி ஆதரவாளர்கள், திராவிட சிந்தனையாளர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்தான் இளையராஜாவின் மகனும் தமிழக இசையுலகில் எதிர்கால நம்பிக்கையும், இளம் தலைமுறையினரால் கொண்டாடப்படும் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் கருத்துக்கு நேர் எதிர் நிலைபாட்டை எடுத்துள்ளார். தந்தை இளையராஜா பாஜகவை, மோடியை ஆதரித்து பேசும் அதே நிலையில், அதற்கு எதிர்நிலை அரசியலான திராவிடத்தை தூக்கிப் பிடிக்கும் வகையில் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார் யுவன்.
கடற்கரை பகுதியில் கருப்பு சட்டை வேட்டி அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, " கருப்பு திராவிடன் கர்வமான தமிழன்" என பதிவிட்டுள்ளார். தனது தந்தை இளையராஜாவின் கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் யுவன் சங்கரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது. இளையராஜாவின் கருத்துக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது. இசைத் துறையிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, அரசியல் ஆதரவு நிலைப்பாட்டிலும் சரி இளையராஜாவுக்கு நேரெதிர் நிலைப்பாட்டினையே யுவன் எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை இளையராஜா செல்வாக்கு மிகுந்த இசையமைப்பாளராக இருந்தாலும் முழுக்க முழுக்க தனது தனித்திறமையால் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் யுவன் சங்கர் ராஜா. எப்போதும், எவருடனும் சகஜமாக பழக கூடியவராக இருந்து வருகிறார் யுவன் ஆனால் இளையராஜா அப்படி அல்ல. குடும்பத்தையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை அமைத்துக் கொண்டவர் யுவன், அதிலும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் அவர். ஆனால் பாரம்பரியம் இந்துமதம் ஆன்மீகம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர்தான் இளையராஜா, ஆனால் இஸ்லாத்தையே தனது மார்க்கமாக ஏற்றுக் கொண்டு இளையராஜாவுக்கு நேர் எதிர் நிலைப்பாட்டை எடுத்தவரே யுவன்.
இந்நிலையில்தான் இளையராஜா மோடிக்கு ஆதரவாக பேசிய நிலையில் நேரெதிர் சித்தாந்தமான திராவிட அடையாளத்துடன் வலிய வந்து தன்னை அடையாளப்படுத்தியுள்ளார் யுவன். யுவனின் இந்த பதிவு இளையராஜாவுக்கு மட்டுமல்ல பாஜகவுக்கும் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.