ஆட்சி மாற்றம் எதிரொலி.. ஐஜி முருகன் பாலியல் வழக்கை இனி தமிழகத்திலேயே விசாரிக்கலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி.!

By vinoth kumarFirst Published Sep 27, 2021, 2:00 PM IST
Highlights

பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.ஜி.முருகன் மீது 2018 ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது. 2018ல் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன், தன்னுடன் பணிபுரிந்த பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது.

ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐ.ஜி.முருகன் மீது 2018 ஆகஸ்ட் மாதம் புகார் அளிக்கப்பட்டது. 2018ல் லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன், தன்னுடன் பணிபுரிந்த பெண் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்த விசாகா கமிட்டி, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்தது. ஆனால், சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை. தமிழகத்தில் விசாரணை நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி முறையிட்டிருந்தார். வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரியும் புகாரளித்த பெண். எஸ்.பி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகார் வழக்கின் விசாரணை மற்றும் அது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை தெலுங்கானா மாநில காவல்துறையை விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை தெலுங்கான டி.ஜி.பி மேற்பார்வையிட வேண்டும். இந்த புகார் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரித்து முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இதை எதிர்த்து ஐ.ஜி. முருகன் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், தெலுங்கானா மாநிலத்தில் இந்த விவகாரத்தை மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.  ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கு விவகாரத்தை தமிழகத்தில் விசாரிக்கலாம். தற்போது தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரிக்கும்போது தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக புகார் அளித்த பெண் எஸ்.பி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டினார். 

மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரர்களின் கோரிக்கையான தமிழகத்திலேயே விசாரணை நடத்த வேண்டும் என்பதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லாததால் மனுக்கள் அத்தனையையும் முடித்து வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார். ஐ.ஜி முருகன் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி தனது வாதத்தை முன்வைத்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் வரும் திங்கட்கிழமை ஒன்றாக பட்டியலிட்டு விசாரித்து அன்றைய தினம் முடிவு அறிவிக்கப்படும் என கூறி வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஐஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, ஐஜி முருகன் மீதான பெண் எஸ்.பி. பாலியல் புகார் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என  உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 

click me!