
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி அவர் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணிவைத்துக் கொண்டால் அதனை வரவேற்பேன் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’நீட் தேர்வுக்கு மாணவ, மாணவியர் முறையாக தயாராகவில்லை. 13 சதவீதம் பேர் பயத்திலேயே தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமக சார்பில் போட்டியிடுமாறு கட்சி நிர்வாகிகள் என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எங்களின் பயணம் சட்டப்பேரவை தேர்தலை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி வந்தால் தான் மக்கள் மத்தியில் கொரோனா மீதான அச்சம் விலகும். நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை திட்டம் வேண்டுமா, வேண்டாமா? என பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். நான் அவருக்கு முன்பாகவே சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி 14 ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வருகிறேன். ரஜினி வேண்டுமென்றால் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அதை வரவேற்பேன்’’என அவர் தெரிவித்தார்.