மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும்.. மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது.. கிருஷ்ணசாமி.

By Ezhilarasan BabuFirst Published Sep 22, 2022, 4:29 PM IST
Highlights

மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், ஆனால் தற்போது மின் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

மின் கட்டண உயர்வை கண்டித்து புதிய தமிழகம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவித்து வருகிறது. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் வரவேற்று பாராட்டி வருகின்றனர். 

அதேநேரத்தில் மின்கட்டண உயர்வு அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைத் திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி  வருகிறோம், அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கும் குறைந்தபட்சம் 25%  முதல் 35 சதவீதம் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக பெயருக்கு மக்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தினர், அதில் மக்கள் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தான்  கூறினார், ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியைகூட நிறைவேற்றவில்லை, தமிழகத்தில் மக்கள் தற்போது தான் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதைத்தொடர்ந்து மின்கட்டணம் உயர்ந்துள்ளது. மத்திய அரசுக்கு சேவகம் செய்வதாக அதிமுகவை கேலி கிண்டல் செய்த திமுக அரசு தற்போது மத்திய அரசு சொன்ன காரணத்திற்காக மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அப்படி என்றால் திமுக மத்திய அரசின் அடிமையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மின்கட்டணம் ஆவின் பால் விலை என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. இதற்காக மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்ற அவர், மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும் ஆனால் இப்போது மின்  கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது என அவர் கூறியுள்ளார். 
 

click me!