நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு தொடர்பாக கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்ட தேசிய தலைவர் ஜேபி நட்டா காரைக்குடியில் இன்று மாலை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
காரைக்குடியில் ஜேபி நட்டா
நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்தவகையில் மாவட்ட தலைவர்களையும் புதிதாக நியமித்துள்ளது. இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வழி நெடுகிலும் மேள தாளங்களுடன்,மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு வரவேற்றனர்.
அப்போது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, ''மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான அடிப்படை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை மோடி திறந்து வைப்பார்.
மேக்கிங் இந்தியா திட்டத்தின் கீழ் இன்றைக்கு இந்தியாவில் 85 சதவீத மக்கள் பயனடைந்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் நிதி ஒதுக்கியும், மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்தும் மதுரையின் வளர்ச்சிக்கும்., கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி உள்ளது. பயண நேரத்தை குறைப்பதற்கு 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, சாகர்மால திட்டம் கொண்டு வந்தது'' என்றார்.
பாஜக 8 ஆண்டு சாதனை
இதனையடுத்து பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை கரைக்குடி எம்.ஏ.எம். திருமண மண்டபத்தில் நடைபெறும் பா.ஜனதா மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார். இதனை தொடர்ந்து மகளிர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஜேபி நட்டா காரைக்குடியில் இன்று இரவு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அப்போது மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசுகிறார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து தமிழக அரசியல் கள நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து நாளை காலை பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் ஜேபி நட்டா , பிறபகலில் தனியார் மண்டபத்தில் நடைபெறும் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படியுங்கள்
கல்வி நிலையங்களில் ஹிஜாப்..! உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்தது..! தீர்ப்பு ஒத்திவைப்பு