
மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதுணையாக நிற்கும் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னை சோனியா காந்தி பேட்மின்டன் டோரணமெண்ட் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் சமுதாயத்தில் சிறந்த விளங்கும் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை உலகம்மாள்,கிருத்திகா தரன்,காமன்வெல்த் வீராங்கனை ஆர்த்தி அருண், இந்திய் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹேமலதா தயாளன், மருத்துவர் எம் ஏ பினாசிர்,மோட்டார் சைக்கிள் வீராங்கனை நிவேதா ஜெசிகா மற்றும் பேஷன் கலை நிபுணர் பிருந்தா ஸ்ரீநாத், திருநங்கை மில்லா, தொலைக்காட்சி தொகுப்பாளினி நித்தியா குமார் உள்ளிட்ட 9 பெண்களுக்கு சாதனைப் பெண்கள் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இவ்விழா மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி: விளையாட்டுத் துறையில் இருந்தாலும் அரசியல் துறையாக இருந்தாலும் இருந்தாலும் அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். விளையாட்டுத் துறையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது தமிழகமும் பின்தங்கி இருக்கிறது. அந்த சூழலை நாம் மாற்ற வேண்டும்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எங்கே இருக்கின்றது என்பதை பார்த்தால் நாம் பட்டியலில் தேட வேண்டிய நிலை உள்ளது அந்த சூழலை நாம் மாற்ற வேண்டும். அதற்காக இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஏதாவது அதிர்ஷ்டம் கிடைக்குமா என்று இளைஞர் காங்கிரஸார் நினைத்தால் முதியோர் காங்கிரஸ் போல நீங்களும் கையேந்தி தான் நிற்கவேண்டும். எனவே உங்களுடைய ஆக்கப்பூர்வமான செயல் மூலம் நிலைமையை மாற்ற வேண்டும். 50 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் மிகவும் அற்புதமான நிகழ்ச்சிகளை நடத்தும் திறன் படைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர் என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கி இருப்பது கண்டனத்திற்குரியது. மத்திய அரசு உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும், மேகதாது விவகாரத்தில் கடந்த அதிமுக அரசு கர்நாடகாவை எதிர்க்க தவறிவிட்டது. மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதுணையாக நிற்கும் எனவும் தெரிவித்தார்.