
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தங்களுடைய கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும் அமைச்சருமான எஸ்.ரகுபதி மற்றும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுக்கோட்டையில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து இரு கட்சிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்த கையெழுத்தான பிறகு சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. மத்திய பட்ஜெட்டை நான் இன்னும் படிக்கவில்லை. எனவே, படிக்காமல் பட்ஜெட் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் எல்லா கட்சிகளுமே அதிக இடங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசைப்படுவது இயல்புதான். ஆனால், கடவுளே வந்தாலும் சீட்டை கூடுதலாக கொடுக்க முடியாது. அதன் காரணமாக தற்போது கரூர் உள்பட சில இடங்களில் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதேவேளையில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையே சுமூகமான சூழல் நிலவுகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தங்களுடைய கூட்டணியில் பாஜகவை சேர்க்காமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் பாஜகவோடு கூட்டணி வைத்த காரணத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது. இதை எல்லாம் அதிமுக இப்போது புரிந்து கொண்டுள்ளது.
பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினர் மற்றும் தமிழர்களின் வாக்குகள் தங்கள் கட்சிக்கு வரவில்லை என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். பாஜகவால் வரும் பாதகங்களை புரிந்து கொள்ள மட்டுமே இத்தேர்தல் உதவும். மற்றப்படி இத்தேர்தலில் அவர்களால் வெற்றி எதுவும் பெற முடியாது. இருந்தபோதிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.