
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்றும், இந்த விவகாரத்தில் அவர் அமைதி காப்பது ஏன் என்றும் முன்னாள் பாஜக எம்.பியும், ஜே.பி நட்டா அமைத்த விசாரணைக் குழு உறுப்பினருமான விஜயசாந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகள், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல் பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுக்கு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூச்சி மருந்து குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது, அதில் பள்ளி நிர்வாகம் மாணவியை மதம் மாற கூறி கட்டாயப்படுத்தியதாகவும், அதன் காரணமாக மன உளைச்சலில் மாணவி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. அந்த வீடியோவை முதன்முதலில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதன் பிறகு இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது, தமிழகத்தில் மதமாற்றம் வெளிப்படையாக நடக்கிறது, இதை அரசும் வேடிக்கை பார்க்கிறது, உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல பாஜக தலைவர்கள் அதை விமர்சித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் விரைந்து கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அப்போது வலியுறுத்தினார். ஆனால் இந்த விவகாரத்தை ஆரம்ப முதலிலிருந்தே விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாணவி விவகாரத்தை பாஜக உள்நோக்கத்துடன் அரசியல் செய்கிறது. தமிழகத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது என்று எச்சரித்து வந்தனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி பேசிய முழு வீடியோ ஒன்று சில தினங்கள் கழித்து வெளியானது. அதில் அந்த மாணவி எந்த இடத்திலும் தான் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தப்பட்டதாக கூறவில்லை.
கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார் என்பதையும் அந்த மாணவி திட்டவட்டமாக மறுத்திருந்தார். செந்தூர் பொட்டு அழிக்க தன்னிடம் யாரும் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். ஆனால் தன்னால் சரியாக தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியவில்லை அந்த விரக்தியில் தான் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவே அவர் கூறியிருந்தார். அக மதமாற்றம் செய்ய சொல்லி அந்த மாணவியை எவரும் துன்புறுத்தவில்லை என்பது அதன் மூலம் தெளிவானது. எனவே மாணவியின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை வைத்து பாஜக அரசியல் செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில்தான் நெட்டிசன்கள் பலரும் தமிழகத்தில் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்ட அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என கூறி #arrestAnnamalai என்ற ஹேஸ்டாக்கை ட்ரெண்டாக்கினர். மாநிலம் முழுவதும் அண்ணாமலைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் திருகாட்டுபள்ளி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்பதை களத்திற்கு சென்று ஆராய்ந்து அறிக்கை வழங்க 4 மாநிலங்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா அமைத்துள்ளார். அதில் பாஜக எம்.பி சந்தியா ராவ், கட்சித் தலைவர்கள் விஜயசாந்தி, சித்தராவாக், கீதா விவேகானந்தா ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த குழு மாணவியின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்திற்கு வருகைதந்தனர். அங்கே மாணவியின் பெற்றோர்களுடன் சுமார் 1 மணிநேரம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். விசாரணைக்குப் பிறகு குழு உறுப்பினர் விஜய்சாந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவியை மதம் மாறு சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில்தான் அதற்கு சம்மதிக்காமல் அவர் தற்கொலை செய்துள்ளார்.
மொத்தத்தில் மாணவி கொடுமை படுத்தப்பட்டுள்ளார். பாஜகவின் போராட்டத்தால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்ய முயற்சி நடந்திருப்பது குறித்து பெற்றோர்கள் இந்த பள்ளிக்கூடத்தை குறித்து யோசிக்க வேண்டும். இவ்வளவு நடந்தும் இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் அமைதியாக இருக்கிறார்? யாரைக் காப்பாற்ற அவர் முயற்சி செய்கிறார்? இந்த சம்பவத்தை திமுக அரசு திசைதிருப்ப முயற்சிக்கிறது. மதத்தை வைத்து வாக்கு வாங்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போலீசார் அராஜகம் செய்வதாகவும், மதமாற்றம் செய்ய முயற்சி நடக்கவில்லை என கூறும்படி போலீசார் கட்டாயப்படுத்துவது பெற்றோர்கள் கூறியுள்ளனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை இந்த பிரச்சினையை பாஜக விடாது, மதமாற்ற முயற்சிக்கு ஒரேயடியாக முடிவு கட்டப்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.