தேர்தலில் 60 தொகுதிகளில் வென்றால் நினைத்ததெல்லாம் நடக்கும்... டாக்டர் ராமதாஸின் அதிரடி டார்கெட்..!

By Asianet TamilFirst Published Jan 12, 2021, 9:46 PM IST
Highlights

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 60 இடங்களில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னர் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

சமூக முன்னேற்ற சங்கச் சொந்தங்களுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் எழுதியுள்ளார். அதில், “கடவுள்களில் கூட ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, காக்கும் சக்தி என 3 வகையான துறைகள் உண்டு. ஆனால், தேர்தலிலும், தேர்தலுக்கு முந்தைய பணிகளிலும் ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி, காக்கும் சக்தி ஆகிய மூன்றும் ஒன்றுதான். அந்த சக்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான்.அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நினைத்தால் தேர்தல் களச்சூழலை மாற்றிவிட முடியும். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கான வாக்குகள் வெறும் 60 விழுக்காடு மட்டும்தான். மீதமுள்ள 40% வாக்குகள் தேர்தலுக்குத் தேர்தல் களச்சூழலைப் பொறுத்து மாறக்கூடியவைதான்.
அந்த 40% வாக்குகள் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு உண்டு. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஆபத்பாந்தவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். கிராமப்புற மக்களிடம் நல்லவை எவை, தீயவை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். உதாரணத்திற்கு 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொள்ளுங்கள். நமது அணி வாக்கு விழுக்காட்டில் வலிமையாக இருந்தது. ஆனாலும், நாம் தோல்வியடைந்ததற்கு காரணம் திமுக ஆதரவு அரசு ஊழியர்களைக் கொண்டு மக்களிடையே செய்யப்பட்ட பொய்யான பரப்புரைதான்.
மத்தியில் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டு விடும் என்று ஒரு பரப்புரை செய்யப்பட்டது. திமுக வெற்றி பெற்றால் நகைக்கடன்கள், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று இன்னொரு பரப்புரை செய்யப்பட்டது. இந்த பரப்புரைகளை செய்தவர்கள் திமுக ஆதரவு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும். அதை மக்கள் அப்படியே நம்பினார்கள். திமுக அணிக்கு வாக்களித்தார்கள். அதனால் அந்த வென்றது; நாம் தோற்றோம். கிராமப்புறங்களில் மக்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருப்பவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்தான். அவர்கள் சொல்லுக்கு மக்களிடம் மரியாதை உண்டு. மக்கள் தங்களின் குடும்பப் பிரச்சினைகளைக்கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கூறி தீர்வு காண்பதுண்டு. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கிராமப்புற மக்கள் தங்களின் வழிகாட்டியாக பார்க்கின்றனர். அதனால் அவர்கள் சொல்வதை கிராமப்புற மக்கள் அப்படியே நம்புவார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறப்பான திட்டங்களை செயல்படுத்துவார்கள்; அதனால் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று அரசு ஊழியர்கள் கூறினால் அதை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். அந்த சக்தியை பயன்படுத்தி வரும் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்குகளை வாங்கித் தர வேண்டும். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக வெளியிட்ட தேர்தல் அறிக்கை மிகச்சிறப்பான ஆவணமாக அமைந்திருந்தது. அனைத்துத் தரப்பினரும் அதை பாராட்டினார்கள். 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதைவிட சிறப்பான தேர்தல் அறிக்கையை பாமக வெளியிட உள்ளது. அதில் உள்ள சிறப்பான அம்சங்களை மக்களிடம் நீங்கள்தான் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மக்களுடன் மக்களாக பழகி வரும் நீங்கள் சொன்னால் மக்கள் அதை நிச்சயமாகக் கேட்பார்கள். பாமக சிறப்பான வாக்குறுதிகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்து, அவற்றை வாக்குகளாக மாற்றும் மாயாஜாலத்தை நீங்கள்தான் நிகழ்த்த வேண்டும்.
உங்களின் திறமையையும் வலிமையையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ இல்லையோ, நான் அறிவேன். தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 10 வாக்குகளை சேகரிக்க முடியும். ஆனால், நீங்கள் நினைத்தால் ஒவ்வொருவரும் நமது கட்சிக்கு 100 முதல் 500 வாக்குகளை சேகரித்துக் கொடுக்க முடியும். அந்த சக்தியும், சாமர்த்தியமும் உங்களுக்கு மட்டும்தான் உண்டு. ஒரு தொகுதியில் 200 ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நமக்காக பாடுபட்டால் அந்தத் தொகுதியில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்று விடலாம். இந்தத் தேர்தலில் நமது இலக்கு 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்காக தீவிரமாகக் களப்பணி ஆற்றுங்கள்.
நீங்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் ஊழியர்கள் என்பதெல்லாம் இரண்டாவதுதான். முதலில் நீங்கள் அனைவரும் சத்திரியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சத்திரியர்கள் தோற்க மாட்டார்கள். நீங்களும் தோற்க மாட்டீர்கள். பாமகவும் தோற்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.


2016 தேர்தலில் நாம் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. நீங்களும் அந்த தேர்தலில் சற்று சுணக்கமாக இருந்துவிட்டீர்கள். அதனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த தேர்தலில் 60 இடங்களில் நாம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும். 60 இடங்களில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பின்னர் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும். உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று யாரிடமும் சென்று நாம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே கையெழுத்தில் நிறைவேற்றிக் கொடுக்க வைக்க முடியும்.
பாமகவுக்கு வெற்றியைத் தேடித் தரப் போகிறவர்கள் நீங்கள்தான். விதைத்தவன்தான் அறுவடை செய்ய முடியும். பாமக அதிகாரத்திற்கு வந்தால் அதன் பயனை அனுபவிக்கப் போகிறவர்களும் நீங்கள்தான். எனவே நீங்களே விதையுங்கள். நீங்களே பயன்களை அறுவடை செய்துகொள்ளுங்கள். இந்தச் சமூகத்தை முன்னேற்றுவதுதான் உங்களின் தலையாயக் கடமை. பாமக அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வந்தால்தான் நமது சமுதாயம் முன்னேறும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்கள் கடமை. அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த சமுதாயம் எப்போதும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!