உள்ளாட்சி தேர்தலில் தோற்றால் திமுக ஒன்றிய செயலாளர்களின் கழுத்தை அறுத்துவிடுவோம்... அமைச்சர் அதிரடி பேச்சு..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2021, 12:14 PM IST
Highlights

தி.மு.க.,வுக்கு துரோகம் செய்யும் கட்சியினர் வாழ மாட்டார்கள். எதிர்காலத்தில் உருப்பட மாட்டார்கள். தேர்தலில் துரோகம் செய்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். 

சட்டமன்றத் தேர்தலில் திமுகவினரே எனக்கு எதிராக செயல்பட்டனர். கடவுளின் அருளால் தப்பித்து விட்டேன். இனி உள்ளாட்சித் தேர்தலில் நான் சர்வாதிகாரியாக நடந்துகொள்வேன் என நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் பேசியது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அதேபாணியில் மற்றொரு திமுக அமைச்சரும் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் தோல்வி அடைந்தால், தி.மு.க., ஒன்றிய செயலர்களின் கழுத்தை அறுத்து விடுவோம்' என, ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுராந்தகத்தில் நடந்த காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், பேசிய அவர், ‘’வரும் உள்ளாட்சித் தேர்தல், மிக மிக முக்கியமான தேர்தல். ஆட்சியின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துச் செல்கிற தேர்தல். கட்சியினரிடம் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை மறந்து, ஒற்றுமையாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

ம.தி.மு.க.,வில், 25 ஆண்டுகளாக இருக்கிற மல்லை சத்யா, நம்மை நம்பி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டார். அவரது தோல்விக்கு, முதல்வர் ஸ்டாலினே ரொம்ப வருத்தப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியாக வேண்டும். அதில் தோல்வி அடைந்தால், கட்சி ஒன்றிய செயலர்கள் கழுத்தை அறுத்து விடுவோம்.

தி.மு.க.,வுக்கு துரோகம் செய்யும் கட்சியினர் வாழ மாட்டார்கள். எதிர்காலத்தில் உருப்பட மாட்டார்கள். தேர்தலில் துரோகம் செய்தால், நடுரோட்டில் நிற்க வேண்டியது வரும். துரோகிகளை கேட்க நாதி இருக்காது. தலைமை அறிவிக்கிற வேட்பாளர்களை, வெற்றி பெற வைக்க வேண்டும். லோக்சபா, சட்டசபை தேர்தலில், எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விரும்பி, மக்கள் ஓட்டுப் போடுவர். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் யோக்கிமானவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் என, வேட்பாளரை பார்த்து தான் ஓட்டுப் போடுவர்’’ என அவர் பேசியுள்ளார். 

click me!