' தில் ’ இருந்தா மோதிபார்.. நாங்க அடிச்சா நீங்க எழுந்துக்க மாட்டிங்க.. பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 12:39 PM IST
Highlights

சிவசேனா தொண்டர்கள் இனி எங்களை தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம், சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தை இடித்துத் தரைமட்டமாக்கவும் தயங்கமாட்டோம் என கூறினார். 

சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கவும் தயங்க மாட்டோம் என பாஜகவின் மேலவை உறுப்பினர் பிரசாத் லாட் கூறியிருந்த நிலையில், இதுபோன்ற மிரட்டல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்றும், மீண்டும் எழ முடியாத அளவுக்கு பதிலடி கொடுப்போம் எனவும்  சிவசேனா தலைவரும் , மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாஜகவும் சிவசேனாவும் இடையே பகை நீடித்து வருகிறது. இயல்பிலேயே  ஒத்த கருத்துக் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மாஹீமில்  தொண்டர்கள் மத்தியில் கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றிய பாஜக மேலவை உறுப்பினர் பிரசாத் லாட், சிவசேனாவை மிககடுமையாக விமர்சித்து பேசினார். நாங்கள் இங்கு வரும்போதெல்லாம் ஒரு பெரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, எங்களைப் பார்த்து அவர்கள் மிகவும் பயப்படுகிறார்கள், நான் அறிக்கை வெளியிட்டமாத்திரத்தில், சேனா பவனுக்கு வெளியே பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிவசேனா தொண்டர்கள் இனி எங்களை தாக்கினால், நாங்களும் பதிலடி கொடுப்போம், சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தை இடித்துத் தரைமட்டமாக்கவும் தயங்கமாட்டோம் என கூறினார். இந்நிலையில் அவரது பேச்சுக்கு தாக்ரே தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

இந்நிலையில் நேற்று மகா விகாஸ் அகாடி அரசின் சார்பில் மும்பை வொர்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூட்டம் நடைபெற்றது, அதில் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர், மற்றும் என்சிபி தலைவர் சரத்பவார் இடம் பெற்றிருந்தார். அப்போது பேசிய முதல்வர் உத்தவ் தாக்கரே, பாஜகவை பகிரங்கமாக விமர்சித்துப் பேசினார். நான் இப்போது விமர்சனங்களுக்கு பழகிவிட்டேன், இப்போதெல்லாம் யாராவது என்னை பாராட்டினால் மட்டும்தான் எனக்கு பயம் வருகிறது.

சிலர் எங்களை தாக்க விரும்புகிறார்கள், சிவசேனா பவன் இடிக்கப்படும் என கூறுகிறார்கள். இதுபோன்ற மிரட்டல்களை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம், அவர்கள் மீண்டும் எழாதபடிக்கு அவர்களுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம் என அவர் பாஜகவை பகிரங்கமாக எச்சரித்தார். பாஜக சிவசேனா இடையேயான இந்த வார்த்தைப் போர் இரு கட்சிகளுக்கு மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!