
விவசாயிகள் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அதிரடியாக கூறியுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் 41 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வந்தது.
முதலமைச்சர் எடப்பாடி உறுதியளித்ததின்பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில், திமுக, கம்யூனிஸ்ட், விசிக, தொண்டர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஏராளமான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக வந்த ஸ்டாலின், மாவட்ட பஸ் ஸ்டாண்ட் முன் போராட்டம் நடத்தினார். இதனால் ஸ்டாலின் உட்பட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர், இன்று கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், விடுவிக்கபட்டபின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :
விவசாயிகளுக்கான போராட்டம் என்பதால் உணர்வுடன் தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் டெல்லி போராட்டம் நடைபெற்றுள்ளது.
டெல்லியில் இருந்து கிளம்பி நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார் அய்யாக்கண்ணு.
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையை வைத்து போராட்டத்தை முடக்க சதி நடந்தது எனக்கு தெரியும்.
விவசாயிகள் பிரச்சனையை தீர்க்கவில்லை என்றால் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.