திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து தலைதூக்கும். இபிஎஸ், ஓபிஎஸ் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2021, 12:38 PM IST
Highlights

கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புக்கும் பதவிக்கு வரமுடியும். ஆனால் இதுபோன்ற நிலை திமுகவில் இல்லை.

மக்கள் நலனே எங்கள் தாரக மந்திரம் என்றும், அராஜகத்தை வேரறுப்போம், அம்மாவின் ஆட்சியை தொடர செய்வோம் என  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் முழு விவரம்: 

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் எண்ணங்களையும் மக்களின் நலன்களையும் கட்டி காத்திடும் வகையில் 16-2-2017 அன்று கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்து  மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதன் அடிப்படையில் கழக அரசு மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றி அனைத்து துறைகளிலும் சாதனைகள் படைத்து, தேர்தல் வாக்குறுதிகளை முற்றிலும் நிறைவேற்றிய அரசாக திகழ்கிறது. 

சாதாரண தொண்டர்களாக இருந்த எங்களை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நிலைகளில், பல பொறுப்புகளை எங்களுக்கு வழங்கி அளிக்கப்பட்ட வாய்ப்பின் அடிப்படையில் நாங்கள் படிப்படியாக உயர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற நிலைக்கு வந்துள்ளோம். தொண்டர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். அதனால்தான் இன்றும் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மாவின் அரசு அறிவித்த மக்கள் நல திட்டங்களினால் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றுள்ளோம்  என்பதை நாங்கள் உணர்கிறோம். அம்மா அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எவ்வாறு செயல்பட்டார்களோ அதே எண்ணத்தின் அடிப்படையிலேதான் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு கிடைத்த இந்த நல் வாய்ப்பினை சிறிதும் குறைவின்றி உங்களது கடமையை நிறைவேற்றி இருக்கிறோம். 

அம்மா அவர்களின் அரசு பொறுப்பேற்றதில் இருந்து திமுகவின் தூண்டுதலின் பெயரில் எண்ணற்ற போராட்டங்கள் பல்வேறு அமைப்புகள் மூலம் நடைபெற்றது. அந்தப் போராட்டங்கள் எல்லாம் சமாதானமான முறையில் பேசி அதற்கு தீர்வு கண்டு வெற்றி கண்ட அரசு எங்கள் தலைமையிலான அரசு என்பதை பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஆட்சிக்கு எதிரிகளின் இடையூறு ஒருபுறமும், துரோகிகளின் இடையூறு மறுபுறமும் இருந்தது. ஆனாலும் இந்த இரண்டு துரோகத்தையும் வென்றெடுக்க கழக அரசுக்கு தோளோடு தோள் கொடுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டு மக்களும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தான். பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே அம்மா அவர்களின் அரசு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியிருக்கிறது என்பதை  எண்ணி நாங்கள் பெருமைப்படுகிறோம். திமுகவில் தொடர்ந்து குடும்ப அரசியல், வாரிசு அரசியல்தான் நடந்து வருகிறது. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அதுபோன்ற நிலை இல்லை. கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும், கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்புக்கும் பதவிக்கு வரமுடியும். ஆனால் இதுபோன்ற நிலை திமுகவில் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் நில அபகரிப்பு நடக்கும், அராஜக ஆட்சி துவங்கும், குடும்ப ஆட்சி தலைதூக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலை ஏற்படும், பெண்களுக்கு  பாதுகாப்பு இருக்காது, நிர்வாக சீர்கேடு ஏற்படும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து காணப்படும், எனவே தமிழ்நாட்டு மக்கள் அமைதியான, ஜாதிக்கலவரம் இல்லாத அனைத்து சமுதாய மக்களும்  நிம்மதியுடன் வளமான வாழ்வு வாழ வழி செய்யும் வகையில் 2021 ஏப்ரல் மாதம் நடைபெறுகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை கருத்தில் கொண்டுதான்  தேர்தல் அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!