பெட்ரோல், டீசல் விலையில் செஸ் வரியை மத்திய அரசு கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் வர தயார்.. பழனிவேல் தியாகராஜன் சவால்!

By Asianet TamilFirst Published Sep 20, 2021, 10:03 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயார் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு லக்னோவில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரக் கூடாது பல மாநில அரசுகள் எதிர்த்தன. அதில் தமிழக அரசும் எதிர்தது. இதனையடுத்து, “பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வரும் நிலைப்பாட்டை திமுக அரசு மாற்றிக்கொண்டதா?" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியிருந்தார். 
 இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2018-இல் கோரிக்கை வைத்தார். 2018 -2021 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 2001-ஆம் ஆண்டில் கச்சா எண்ணெயின் வ் இலை ஒரு பேரலுக்கு 10 டாலர். 2013-இல் 130 டாலராக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்தது.
ஆனால், 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் செஸ் வரி  ரூ.10 எனவும், டீசல் வரி ரூ. 5 எனவும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி ரூ. 32, டீசல் வரி ரூ.31 ஆக உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்காமல் வைத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசு விரும்பவில்லை. ஒன்றிய அரசின் மொத்த வருவாயில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாகத்தான் வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை, மாநில அரசுகளும் விரும்பவில்லை.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்திருக்கிறது. ஆனால், மக்கள் மீது இரு மடங்கு வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நேர்முக வரியை 100 சதவீதம் ஒன்றிய அரசே எடுத்துகொள்கிறது. மாநிலங்களுக்கு பெட்ரொல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயையும் ஒன்றிய அரசே எடுத்து கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாக செய்ய முடியும்? நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசுகள் இழந்து விட்டன. நிலைமை மாறியிருப்பதால்தான் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால், கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால் தமிழக அரசு ஜி.எஸ்.டி க்குள் வர தயார்” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

click me!