இவரா தமிழக நிதி அமைச்சர்..? வெட்கி குனியும் தமிழகம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி கண்டித்த அண்ணாமலை.!

By Asianet TamilFirst Published Sep 20, 2021, 9:56 PM IST
Highlights

ஆட்சியில் வந்து அமர்ந்த பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதில் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி விமர்சித்துள்ளார்.
 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதி அமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.
கொரோனா நோய் தொற்றால் இணைய வழியில் நடைபெற்ற இந்த கவுன்சில் கூட்டம், சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தின் பிரச்சனைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது மக்களை மதிக்காத எதேச்சதிகாரம் என்பது பாஜகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே ஆகும்.
நிதி அமைச்சர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது, ‘தான் கலந்து கொள்ள இயலாத காரணத்தைச் சொன்ன போது தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்ததும் என்றும் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால்தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டு நிதி அமைச்சர்? இதிலிருந்து தமிழக அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.
செப்டம்பர் 2ஆம் தேதியே லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்டது, ஆனால், போதிய அவகாசம் இல்லை என்கிறார் நிதி அமைச்சர் PTR.தியாகராஜன். லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறார், பின்னர் தந்த விளக்கத்தில் சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறார். பயணிக்க ஒன்றரை நாட்களாகும் மூன்று விமானங்கள் மாற வேண்டும் என்று தன் கூற்றுக்கு தன்னிலை விளக்கம் வேறு தருகிறார். வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை, அவர் சட்டப்பேரவையில் சொல்வது போலச் சொல்கிறார்.
‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்’ என்ற திருக்குறள் இவருக்காகவே அமைந்தது போலும். சாலமன் பாப்பையா விளக்கத்தில் சொன்னால்  ‘பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லும் அமைச்சன் எல்லாராலும் இகழப்படுவான்’. தற்போது நடைற்ற 45-ஆவது கூட்டத்துக்கு முந்தைய ஐந்து கூட்டங்கள் கொரோனா பேரிடர் காரணமாக இணைய வழியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி இணையவழியில் நடைபெறாமல், நேரடிப் பங்களிப்பில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.
ஆகவே, இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறையில் அமைச்சராக இருந்தும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்தும் பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை அரசியல் சாசன எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிக்கட்சித் தலைவராக தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால், ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாறக் காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதி அமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்” என்று அந்தக் கடிதத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

click me!