தமிழகத்தில் 25 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்றால்...! 5 மத்திய அமைச்சர்கள் உறுதி..? அண்ணாமலை திட்டவட்டம்..

By Ajmal KhanFirst Published Apr 15, 2022, 10:57 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்றால், 5 பேர் மத்திய அமைச்சராவது உறுதியென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளை துவக்கிய பாஜக

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும்  இரண்டு வருடங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை துவங்குமாறு மாநில தலைமைக்கு மத்திய பாஜக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை பாஜக துவங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுவிற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான வாக்குகளை பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. எனவே இதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான  பணிகளை துவங்க மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். சரியாக செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களை மாற்றப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து செயல்படாத நிர்வாகிகளை மாற்ற கடந்த சில வாரங்களாக பாஜக மாநில தலைவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பட்டியலை தயாரித்து டெல்லி தலைமைக்கு அனுப்பியுள்ளார். எனவே விரைவில் பாஜக மாவட்ட தலைவர்கள் மாற்றம் தொடர்பாக அறிவிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

50 ஆயிரம் கோடி அளவிற்கான திட்டம்

இந்தநிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி செங்கல்பட்டில் தமிழக பாஜக சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பாஜக வேகமாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவிற்கு தான் மக்கள் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் இருந்து பாஜக எம்.பி.கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவர முடியும். ஆனால்  அது திமுக எம்.பி-களால் முடியாது என அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகத்திற்கு 5 அமைச்சர்கள் உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்பி-களை பாஜக பெறுவது உறுதியென தெரிவித்தார். அப்படி  25 எம்பிகள் வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு 5 கேபினெட் அமைச்சர்களை போராடி பெற்றுத் தருவது என்னுடைய பொறுப்பு எனவும் கூறினார்.  அதை வேளையில்  தமிழகத்தில் இருந்து திமுக எம்.பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு ஆண்டுக்கு 24 விமான டிக்கெட், பி.எஸ்.என்.எல் இலவச தொலைபேசி, 2 பி.ஏ-களுக்கு இலவச சம்பளம் மட்டுமே கிடைக்கும் என கூறினார். இப்போது இருக்கும் எம்பிகளுக்கு இதுதான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதை தவிர வேறு எதுவும் தமிழக மக்களுக்கு கிடைக்காது என தெரிவித்தார்.  எனவே வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் ஒவ்வொரு தொகுதிக்கும் 50 ஆயிரம் கோடி நலத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மக்கள் தயாராகிவிட்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.

click me!