அது மட்டும் நடந்தால் ஸ்டாலின் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது.? கதை கந்தல், திகில் கிளப்பும் எடப்பாடியார்.

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2020, 11:38 AM IST
Highlights

உச்சநீதிமன்றத்தில் அவர் மீதான தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அது எப்படி முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. ஆக முடிவு வேறு விதமாக இருந்தால், அவர் 6 ஆண்டிற்கு தேர்தலில் நிற்க முடியாது. 

ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு முடிவு வேறு விதமாக இருந்தால் அவர் ஆறு வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்த அரசாங்கம் இவ்வளவு நெருக்கடியிலும் எப்படி சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறித்த உண்மை செய்திகளை ஊடகங்களும், பத்திரிக்கைகளும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஸ்டாலின் உண்மையான அரசியல் கட்சித் தலைவராக இருந்தால் இப்போது தமிழகத்தை பாராட்ட வேண்டும். மற்ற  மாநிலங்களுடன், ஏன் கேரளாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகம் கொரோனாவை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தி இருக்கிறது என்பதை எண்ணிக் பார்க்க வேண்டும் என்றார். 

அதற்கு ஸ்டாலின் மருத்துவர்களையும், செவிலியர்களையும், அரசு ஊழியர்களையும் பாராட்ட வேண்டும். அரசாங்கம் சட்டம் தான் போடுகிறது, ஆலோசனைகளைதான் கொடுக்கிறது, ஆனால் அதை நிறைவேற்றிக் கொண்டிருப்பது அதிகாரிகள்தான் என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள் என்றார். சில மாதங்களுக்கு முன்பு கேரளாவை ஒப்பிட்டு தமிழகத்தை பேசினார்களே, இப்போது கேரளாவில் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கிறது இப்போது ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார். புதிதாக ஒரு கட்சி முளைத்திருக்கிறது, அந்த கட்சியின் பெயரைச் சொல்லி அதை நான் பிரபலப்படுத்த விரும்பவில்லை, அந்தக் கட்சித் தலைவர் கூறினார் கேரளாவை போய் பாருங்கள் என்று. இப்போ அவரை போய் கேரளாவை பார்க்க சொல்லுங்கள், எல்லாம் போய் திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் தங்கியிருந்து வாருங்கள் அப்போது தெரியும் நிலைமை எண்ண என்று. இந்த அரசின் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இந்த ஆட்சியின் மீதும், அரசு மீதும் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் மூலமாகவே கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. 

அதற்கு நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், இன்னும் பலத்துறை அதிகாரிகள் காரணம் என அவர் கூறினார். தயவு செய்து இனியும் கொரோனாவை வைத்து அரசியல் ஈடுபடாதீர்கள் என அவர் கேட்டுக் கொண்டார். அதிமுக செய்கின்ற திட்டங்கள் அனைத்தும் நாட்டு மக்களுக்கு நேரடியாக போய் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பதை மட்டும் ஸ்டாலின் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் கூட அடுத்த தேர்தலில் நிற்க முடியுமா என்ற கேள்வி இருக்கின்றது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்றது, உச்சநீதிமன்றத்தில் அவர் மீதான தேர்தல் வழக்கு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அது எப்படி முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. ஆக முடிவு வேறு விதமாக இருந்தால், அவர் 6 ஆண்டிற்கு தேர்தலில் நிற்க முடியாது. அவருடைய கனவு பலிக்காது. நல்ல எண்ணம் படைத்தால் நல்ல தீர்ப்பு கிடைக்கும், தீய எண்ணம் கொண்டால் ஆண்டவன் பார்த்துக் கொள்வான். இவ்வாறு முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்
 

click me!