சினிமா தியோட்டர் திறந்தாச்சு... ஊரடங்கு தளர்த்தியாச்சு... ஏன் மெரினாவை திறக்க வில்லை. நீதிமன்றம் கேள்வி..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 12, 2020, 10:50 AM IST
Highlights

நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,

சென்னை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மெரினாவை சுத்தப்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், லூப் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாநகராட்சி ஆணையரும், காவல் ஆணையரும் மெரினாவில் திடீர் சோதனைகள் நடத்தியதாகவும் குறிப்பிட்டார். மெரினா கடற்கரையில் தள்ளுவண்டிகளுக்கான டெண்டரை திறக்க தனி நீதிபதி தடை விதித்துள்ளதால், அந்த டெண்டரை திறக்க இயலவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, தனி நீதிபதி முன் உள்ள வழக்கை, இந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 18ம்தேதிக்குதள்ளிவைத்தனர். 

பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.அதற்கு, நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லை என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதிலளித்தார். இதையடுத்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் அரசு முடிவெடுக்காவிட்டால், நீதிமன்றம் உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
 

click me!