
வி.கே.சசிகலாவுக்கு தேர்தலில் வாக்களிக்கும் அடிப்படை உரிமையை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்று அமமுக நிர்வாகி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், அதில் வசித்த சசிகலா, இளவரசி உள்ளிட்ட 19 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சசிகலா, இளவரசி ஆகியோர் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி உள்ள நிலையில், அவர்களுக்கு மீண்டும் வாக்குரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இதனிடையே, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதுவரை சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாததால், அமமுக நிர்வாகி வைத்தியநாதன் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக நிர்வாகியும், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான வைத்தியநாதன், சசிகலா தனது ஜனநாயக கடமையை ஆற்ற அவருக்கு வாக்குரிமையை வழங்க வேண்டும் என்றார்.
இல்லாவிட்டால் ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தலை நடத்தக் கூடாது என்றும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டுள்ளதாக கூறினார். ரஜினிகாந்த் ஒருமுறை அதிமுகவிற்கு ஓட்டு போட்டதை ஊடகங்கள் காட்டியதன் விளைவுதான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது என தெரிவித்தார். எனவே ஒரு ஓட்டை குறைந்து மதிப்பிடவேண்டாம் என்றார். இது தவிர, ஆயிரம் விளக்கு தொகுதியில் 19,000 அமமுக தொண்டர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியநாதன் புகார் தெரிவித்துள்ளார்.