ஓட்டு போடலனா ஒரு வேலையும் நடக்காது.. வாக்காளர்களை மிரட்டிய துரைமுருகன், கே.என் நேரு.. ?? அதிமுக புகார்.

Published : Feb 16, 2022, 01:52 PM IST
ஓட்டு போடலனா ஒரு வேலையும் நடக்காது.. வாக்காளர்களை மிரட்டிய துரைமுருகன், கே.என் நேரு.. ?? அதிமுக புகார்.

சுருக்கம்

வாணியம்பாடியில்  நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் துரைமுருகன் திமுக வெற்றி பெறாவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த  5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரிப்பதாக கூறியுள்ளார். 

திமுகவுக்கு வாக்களிக்க வில்லை என்றால் புறக்கணிக்கப்படுவீர்கள் என சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசி வருவதாக தேர்தல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்து வரும் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 200 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு மூன்று குழுக்கள் என 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் விதிகளை மீறி போஸ்டர் ஒட்ட அனுமதிக்கக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி விதிகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை உடனடியாக அகற்றி அதற்கான செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கவும் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படி தேர்தல் விதிமுறைகள் குறித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள நிலையில்தான் திமுகவின் சீனியர் அமைச்சர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாக்காளர்களை மிரட்டும் தொணியில் பிரச்சாரம் செய்து வருவதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் மினி சட்டமன்ற தேர்தலாக கருதப்படுவதால், அதிமுக திமுக என இரண்டு கட்சிகளிலும் முக்கிய தலைவர்கள்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீனியர் அமைச்சர்கள் துரைமுருகன் கே.என் நேரு போன்றோரும் பிரச்சார களத்தில்  சுற்றி சுழன்று வருகின்றனர். இந்நிலையில்தான் துரைமுருகன், கே.என் நேரு போன்றோர் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசி வருவதாகவும், எனவே அவர்களின் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் எச்சரித்துள்ளார். இது குறித்து பாபு முருகவேல் கொடுத்துள்ள பேட்டி பின்வருமாறு:- 

"திமுக அமைச்சர்கள்   தேர்தல் நடத்தை விதிகளையும் ,  சட்டத்தையும் மீறி செயல்படுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அணையரிடம் புகார் மனு அளித்துள்ளோம்.  வாணியம்பாடியில்  நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் துரைமுருகன் திமுக வெற்றி பெறாவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த  5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரிப்பதாக கூறியுள்ளார். நேற்று திருவெறும்பூரில் பிரசாரத்தில் நகராட்சி துறை அமைச்சர்  கே.என். நேரு தனது துறையின் கீழ் வரக்கூடிய சாலை, தெரு விளக்கு, கழிப்பறை , கால்வாய் , பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற திமுகவிற்கே வாக்களிக்க வேண்டும் எனவும் , போட்டியிடும் இரண்டு திமுக வேட்பாளர்களும் தோல்வி அடைந்தால் அங்குள்ள தெருக்குழாய் இணைப்பு துண்டிக்கபடும் என்றும் பேசியுள்ளனர். 

இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல், விதிமுறைகளை மீறி வாக்காளர்களை மிரட்டும் வகையில் பிரசாரம் செய்து வரும் அமைச்சர்கள் துரைமுருகன் , கே.என் நேரு இருவரும் பிரசாரத்தின் இறுதி நாளான நாளைய தினம்  பிரசாரம் செய்ய  தடை விதிக்க வேண்டும் எனவும் ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரித்தபோது திமுகவினர் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி வருவதை பார்த்து புகாரளித்துள்ளார். ஆனால் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் புகார்களின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் , அதன்காரணமாக தேர்தல் ஆணையம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும் "என்று கூறினார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!