அதிமுக இல்லையென்றால் அன்புமணி எம்.பி., ஆகியிருக்க முடியுமா? புலியிடம் எலி வாலாட்டலாமா..? பாமகவுடன் மோதல் ..!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2021, 11:54 AM IST
Highlights

ஓ.பி.எஸ் குறித்து பேசினால், நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. 

அதிமுக இல்லை என்றால் அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஆகியிருக்க முடியுமா என அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக பேசிய அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ’’சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்ற 6 தொகுதிகளில் மட்டும் தான் அந்த கட்சிக்குச் செல்வாக்கும், அதிகாரமும் இருக்கிறது. அப்படியிருக்கும் போது பா.ம.க இல்லையென்றால் அதிமுக 20 தொகுதிகளில் கூட வெற்றிபெற்றிருக்காது என்று பா.ம.க-வினர் கூறி வருவது முறையல்ல.

பா.ம.க.வின் தேர்தல் நிலைப்பாட்டில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அதேபோல, அதிமுக தலைவர்களைப் பற்றி அவர்கள் பேசுவதும் முறையானதல்ல. பா.ம.க-வால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதிகளில் பா.ம.க-வுக்கு எந்த விதமான வேலையும் இல்லை. அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால் பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அன்புமணி இன்று ராஜ்யசபா எம்.பி-யாக இருக்கிறார். அப்படியிருக்கும் போது அன்புமணி தேவையற்ற கருத்துக்களைக் கூறிவருகிறார்.

அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால்தான் பா.ம.க சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவி விட்டதாகச் சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது. பா.ம.க-வின் கோட்டையெனக் கருதப்பட்டு வந்த பல தொகுதிகளில் எல்லாம் முழுமையாக அ.தி.மு.க தோற்றுள்ளது. போடிநாயக்கனூர், எடப்பாடி, அவினாசி உள்பட 51 தொகுதிகளில், 2016 தேர்தலில் பெற்ற வெற்றியைத்தான் தற்போதும் தக்க வைத்துள்ளோம். ஒரத்தநாடு, கன்னியாகுமரி உள்பட 9 தொகுதிகளில் பா.ம.க.வுக்கு எந்த செயல்பாடுகளும் கிடையாது. 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவின் செயல்பாடுகள் உள்ளன. எனவே, பா.ம.க. இல்லை என்றால், அதிமுக வெற்றிபெற்று இருக்காது என்று சொல்வது சரியில்லை.

இப்படியிருக்கும் போது எங்கள் கட்சியின் தலைவர்களை அவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது, பின்னர் வெளியேறுவது, எங்களால்தான் எல்லாமே நடந்தது என்று கூறுவது பாமக-வுக்கு வழக்கம். `பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோற்றோம்' என்று அதிமுக தலைவர்களோ, நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம்.

வன்னியருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற முறையில்தான் 10.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் குறித்து பேசினால், நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம் என்று கருதினால், அதுமுட்டாள்தனமானது. பாமக போன்ற சிறிய கட்சி, அதிமுகவை கிண்டல் செய்வதை எப்படி வேடிக்கைப் பார்க்க முடியும். 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ள பாமக முதலில் அதன் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்’’ என அவர் கூறினார். 

click me!