கலைஞருக்கு இடம் கிடைக்கவில்லை என்றால் நானும் இறந்திருப்பேன்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சிப் பேச்சு…

By Selvanayagam PFirst Published Aug 14, 2018, 1:31 PM IST
Highlights

கலைஞருக்கு  இடம் கிடைக்கவில்லை என்றால் நானும் இறந்திருப்பேன்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சிப் பேச்சு…

திமுக சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பேசிய அனைத்துத் தலைவர்களும் கருணாநிதியின் புகழை எடுத்துரைத்ததுடன், கண்ணீர் விட்டு அழுதனர்.

திமுக தலைமை நிலைய செயலாளர் துரை முருகன், சுப்புலட்சுமி ஜெகதீசன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கண்ணீர் மல்க பேசினர்.

இதையடுத்து செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உணர்ச்சிப் பெருக்குடன் பேசத் தொடங்கினார். கடந்த  ஒன்றரை ஆண்டு காலமாக கருணாநிதிக்கு உடல் நலம் குன்றியபோது கட்சிக்கு பொறுப்பேற்று நடத்த தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நிலை மோசமடைந்த போது டாக்டர்கள்  கைவிரித்துவிட்டனர். கண்ணீருடன் இங்கும், அங்கும் அலைந்து கொண்டிருக்கிறோம்.. கருணாநிதியின் கடைசி ஆசை அவரது உடலை அண்ணா சமாதி அருகே அடக்கம் பண்ண வேண்டும் என்பதுதான். அதை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என எண்ணிக் கலங்கியதாக கூறினார்.

இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து நிகழ்வுகள்,  இடம் கொடுக்க அரசு மறுத்தது, சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது என ஒவ்வொன்றையும் கண்ணீருடன் எடுத்துரைத்தார். ஒரு வேளை அண்ணா நினைவிடத்தில் கலைஞரை அடக்கம் பண்ண இடம் கிடைக்காமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதையும் நா தழுதழுக்க கூறினார் ஸ்டாலின்.

ஒரு முறை திமுக கட்சி மீதான உரிமை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது திமுகவின் கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்த  முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால்  அப்போது நாம் வெற்றி பெற்றோம். கட்சியும், கொடியும் நம் வசம் வந்தது.

இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த கருணாநிதி ஒரு வேளை நாம் தோற்றுப் போயிருந்தால்  அண்ணா பக்கத்தில தன்னை புதைக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்கும் என்று கருணாநிதி  தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

அது போல் தான் ஒரு வேளை கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் போயிருந்தால் என்னையும் அவர் அருகிலேயே புதைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கும் என கண்ணிர்விட்டு அழுதார். ஸ்டாலின் இந்தப் பேச்சு செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது

click me!