என் தலைமையில் இருந்திருந்தால் இப்போதும் அதிமுக ஆட்சிதான்... ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸை அலற வைக்கும் சசிகலா..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 10:51 AM IST
Highlights

கொரோனா தாக்கம் முழுசா ஓயட்டும். கட்டாயம் நான் வந்துருவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போய்க்கிட்டு இருக்கு. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன்.

அதிமுகவை கைப்பற்ற சசிகலா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் அதிமுக தொண்டர்களிடம் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து அவருக்கு எதிராக ஓ.பி.எஸும்- எடப்பாடி பழனிசாமியும் மாவட்டம் தோறும் கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளனர்.

ஆனாலும், சசிகலா தொண்டர்களுடன் தொலைபேசியில் தினந்தோறும் பேசி வருகிறார். அந்த வகையி்ல் ஈரோட்டை சேர்ந்த சிதம்பரம் என்ற தொண்டரிடம் சசிகலா பேசுகையில், ’’கொரோனா தாக்கம் முழுசா ஓயட்டும். கட்டாயம் நான் வந்துருவேன். கட்சியே இப்போ வேற மாதிரி போய்க்கிட்டு இருக்கு. விரைவில் வந்து இந்த கட்சியை காப்பாற்றுவேன்.

அம்மா இருக்கும்போது நம்ம கட்சி நாட்டிலேயே 3ஆவது பெரிய கட்சினு நமக்கு அந்தஸ்து கிடைச்சது. ஆனா இன்னைக்கு நம்ம எம்.பி.க்களை நாமே இழந்திருக்கிறோம். இருந்த எம்.பி.க்களையும், அவங்களோட தவறான முடிவுகளால் வேற கட்சிக்கு தாரை வார்த்திருக்கிறோம். எந்த பிரச்சினையும் ஏற்படாம என்னோட தலைமையில ஒற்றுமையாக இருந்துருந்தா நிச்சயம் ஆட்சி அமைச்சிருக்கலாம்.” எனப்பேசியுள்ளார். 

அடுத்து, சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த சுந்தரம் என்பவரிடம் சசிகலா பேசுகையில், “சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாம இருங்க. நான் வந்து எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன்”என்று கூறியுள்ளார். அதேபோல, காஞ்சிபுரத்தை சேர்ந்த சந்திரசேகர், ஈரோட்டை சேர்ந்த பழனிசாமி ஆகியோருடன் பேசும் ஆடியோக்களும் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதில், “அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சேலம் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட மாணவரணி இணை செயலாளர் ராமகிருஷ்ணன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் சரவணன், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் சண்முகபிரியா, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற முன்னாள் இணைச்செயலாளர் திம்மராஜபுரம் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவரணி இணைச்செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது.” எனக் கூறப்பட்டுள்ளது. 
 

click me!