அரசு அதிகாரத்தில் தலையிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.. அளுநர் ஆர்.என் ரவியை எச்சரித்து அழகிரி.

By Ezhilarasan BabuFirst Published Oct 26, 2021, 4:44 PM IST
Highlights

எந்த நிலையிலும் மத்திய பாஜக அரசு ஏஜென்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது, மேலும் கடந்த 2014ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அருணாச்சல பிரதேச மாநில ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதால் உச்சநீதிமன்றத்தால் அவரது நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது என்றும், தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி கண்காணிப்பதற்கும் தலையிடுவதற்கு ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் எச்சரித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளைக் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயல் என்றும், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது என கே.எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டோமே தவிர அதிபர் ஆட்சி முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அதிக அதிகாரங்களை வழங்கக்கூடிய வகையில் தான் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. குடியரசு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், மக்களவை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட பிரதமருக்கும், அமைச்சரவைக்  குழுவுக்கும் தான் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை குடியரசுத்தலைவர் அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின் படியும், ஆலோசனையின் படியும் தான் செயல்பட முடியுமே தவிர நேரடியாக செயல்பட முடியாது. குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டு இருக்கிற அதிகாரங்களைப் போல, மாநில அளவில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் அரசியல் சட்டத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. ஆளுநரை பொருத்தவரையில் அமைச்சரவையில் அறிவுரையின்படி ஆலோசனையின் பேரிலும் தான் செயல்பட முடியும் நேரடியாக செயல்பட முடியாது. பெயரளவில் நிர்வாக தலைமை பொறுப்பை ஆளுநர் ஏற்று இருந்தாலும், உண்மையான அதிகாரம் அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை குழுவுக்குதான் இருக்கிறது.

இந்நிலையில் மாநில அரசு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது, இது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. தமிழக அரசின் திட்டங்கள் துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி கண்காணிப்பதற்கும் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை, குடியரசுத் தலைவர் அடிப்படையில் பொறுப்புக்கு வந்தவரே தவிர, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களிடம் அதிக வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு பெற்றவர்தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். மக்கள் நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கடமை, பொறுப்பு, முதலமைச்சருக்கும், அமைச்சரவை குழுவிற்கும் தான் இருக்குமேயொழிய ஆளுநருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஆளுநரின் தலையீடு உள்நோக்கம் கொண்டது. அமைச்சரவை சட்டத்திற்கு எதிரானது.

1968 நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்க்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயலாகும், தமிழக ஆளுநர் நியமனம் செய்யப்பட்டது முதல் அவர் மீது எழுப்பப்பட்ட சந்தேகங்கள் வலுப்பெறுகிற வகையில் அவர் தற்போது மாநில அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவும் முடியாது. இத்தகைய தலையீடுகளின் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசின் நலன்களை காக்கவும் முற்படுகிறார் என்று குற்றச்சாட்டவிரும்புகிறேன்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபட்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் வலுபெறுகிறது. அமைச்சரவை சட்டத்தை வடித்துத் தந்த டாக்டர் பி. ஆர் அம்பேத்கர் அவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கு தன்னிச்சையாக செயல்படுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை, அமைச்சரவையின் ஆலோசனையை மீறி செயல்படுவதற்கும் ஆளுநருக்கு உரிமையில்லை என்று தெளிவுபட குறிப்பிட்டிருக்கிறார்.

எந்த நிலையிலும் மத்திய பாஜக அரசு ஏஜென்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது, மேலும் கடந்த 2014ஆம் ஆண்டுகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அருணாச்சல பிரதேச மாநில ஆளுநர் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதால் உச்சநீதிமன்றத்தால் அவரது நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல தில்லி மாநில ஆளுநரின் சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து கூறியதையடுத்து பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது எனபதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று அவர்கள் அரசமைப்பு சட்டத்திற்கு உட்படாமல் வரம்புகளை மீறி நோக்கத்தோடு செயல்படுவார்கலானால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும், ஏற்கனவே ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். எனவே கடந்த ஆறு மாதங்களாக மக்கள் நல திட்டங்களை மிக சிறப்பாக நிறைவேற்றி வருகிறார் தமிழக முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழக அரசுக்கு ஆளுநர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர, அரசு துறைகளில் செயல்பாடுகளில் தலையிடுகிற போக்கை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!